• Fri. Sep 29th, 2023

மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழா – பக்தர்களுக்கு புட்டு பிரசாதம்..!

ByKalamegam Viswanathan

Aug 27, 2023

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும், சித்திரை திருவிழாவில் மீனாட்சிக்கும், ஆவணி திருவிழாவில் சுந்தரேசுவரருக்கும் பட்டாபிஷேகம் நடைபெறும். அதிலும் சிவபெருமான் நடத்திய 64 திருவிளையாடல்களில் 12 திருவிளையாடல் லீலைகள் ஆவணி மூலத்திருவிழாவில் நடைபெறுவது சிறப்பு அம்சமாகும்.
அதன்படி இந்த ஆண்டிற்கான சிறப்பு வாய்ந்த ஆவணி மூலத்திருவிழா கடந்த 13 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் சிவபெருமானின் லீலைகளை எடுத்துக்கூறும் வகையிலான நாள்தோறும் ஒவ்வொரு லீலைகள் நடைபெற்று அதன் பின்னர் சுவாமி அம்மன் வீதி உலா நடைபெற்றுவருகிறது. இதையடுத்து சிவபெருமான் நிகழ்த்திய மாணிக்கம் விற்றது, நாரைக்கு மோட்சம் அளித்தது , பொற்கிழி அளித்தது போன்ற சிவபெருமானின் திருவிளையாடல்கள் ஆடி வீதியில் தினமும் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் 7ஆம் நாள் நிகழ்வாக சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம் நடைபெற்ற நிலையில் 8ஆம்நாள் நிகழ்வாக இரவு நரியை பரியாக்கிய லீலை நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக விழாவின் சிகர நிகழ்ச்சியான பிட்டுக்கு மண் சுமந்த லீலை இன்று கோலாகலமாக நடைபெற்றது.
இதற்காக கோவிலில் இருந்து சுந்தரேஸ்வரர், மீனாட்சிஅம்மன், பிரியாவிடையுடன் ஆரப்பாளையம் வைகை ஆற்றோரம் உள்ள புட்டுத்தோப்பு சேதுபதி மண்டபத்தில் எழுந்தருளினர். மேலும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடனும், திருவாதவூர் அருளாளர் மாணிக்கவாசகர் ஆகியோரும் எழுந்தருளியிருந்த சேதுபதி மண்டபத்தில் புட்டுத் திருவிழா பூஜைகள் சிறப்பாக நடைபெற்றன. இதில் சுவாமி வேடமணிந்த சிவாச்சாரியாரும், மன்னர் வேடமணிந்த சிவாச்சாரியாரும் சுவாமியின் பிட்டுக்கு மண்சுமந்த லீலையை நிகழ்த்தினர்.
பின்னர் வந்தியக் கிழவிக்கும், மக்களுக்கும் சுந்தரேஸ்வரர் அருள்பாலிப்பது போல பூஜைகள் நடந்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. விழாவில் ஆயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பூஜையில் வைக்கப்பட்ட புட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது. மேலும் விழாவையொட்டி பல்வேறு வகையான புட்டுக்கள் விற்பனையும் அமோகமாக நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *