• Thu. Aug 13th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

மதுரை மாநகராட்சி முறைகேடுகள்: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் – தவெக எம்.எல்.ஏ.க்கள் எச்சரிக்கை..,

ByKalamegam Viswanathan

Jul 15, 2026

மதுரை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சியில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் ஊழல் தொடர்பாக கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தனர்.

மதுரை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தவெக சார்பில் மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ. முஸ்தபா மதார் பதுருதீன், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. கோபிசன், கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. கார்த்திகேயன் ஆகியோர் பங்கேற்றனர். நேற்று காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை நடைபெற்ற கூட்டத்தில், மூவரும் இறுதிவரை அவையிலேயே இருந்து மாமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொரு வார்டு தொடர்பாக எழுப்பிய பிரச்சினைகளையும், அதிகாரிகள் அளித்த விளக்கங்களையும் குறிப்பெடுத்துக் கொண்டனர். கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கும்போதே சில அதிமுக, திமுக கவுன்சிலர்கள் வெளியேறிய நிலையிலும், தவெக எம்.எல்.ஏ.க்கள் முழு கூட்டத்தையும் கவனமாகக் கேட்டது அதிகாரிகளிடையே கவனத்தை ஈர்த்தது.

கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், மாநகராட்சியில் மக்களின் அடிப்படை பிரச்சினைகள், வருவாய் இழப்புகள் மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்து அவையில் பேசப்பட்டதாக தெரிவித்தனர்.

தோப்பூர் ஊராட்சியில் வழங்கப்பட்ட டிடிசிபி ஒப்புதலை பயன்படுத்தி உத்தங்குடியில் உள்ள லேஅவுட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய அவர்கள், கட்டிட அனுமதி வழங்கியதில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து நகரமைப்பு பிரிவில் ஏற்கனவே புகார் அளித்திருப்பதாக தெரிவித்தனர்.

கடந்த மாமன்றக் கூட்டத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு 10 நாட்களில் பதில் அளிப்பதாக கூறிய நிலையில், 45 நாட்களாகியும் பதில் வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

மதுரை மாநகராட்சியில் ஊழல் நடைபெறவில்லை என்றால், மேயர் மற்றும் மண்டலத் தலைவர்கள் ஏன் நீக்கப்பட்டார்கள் என்று கேள்வி எழுப்பிய அவர்கள், ஊழலில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

மேலும், மாநகராட்சி முறைகேடுகள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் முதலமைச்சரிடம் எடுத்துரைத்த பிறகு, அவரது அனுமதியுடன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதோடு, தவறு செய்தவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவித்தனர்.

அரசு மருத்துவமனைகளின் மருத்துவக் கழிவுகள் அகற்றப்பட்டதற்கான ஆவணங்கள் இல்லை என்றும், இது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மத்திய சிறை வளாகத்தின் 41 ஏக்கர் நிலத்தில் கல்லூரி மற்றும் விளையாட்டு உள்கட்டமைப்பு அமைக்க உயர்கல்வித்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்களிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும், மதுரையின் வளர்ச்சிக்காக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

மாநகராட்சியை மாடல் சிட்டி என்று கூறிய திமுக அரசு வளர்ச்சியில் தோல்வியடைந்துள்ளதாக விமர்சித்த அவர்கள், வைகை நதியை பாதுகாக்க தவெக அரசு அமைந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினர்.

மேலும், மதுரை கிழக்கு தொகுதியில் 50 சாலைகள் உரிய அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டிய அவர்கள், இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தி, அந்தப் பணிகளுக்கு நிதி வழங்கக் கூடாது என்றும் வலியுறுத்தினர்.

இறுதியாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மாமன்றக் கூட்டங்களில் முழுமையாக பங்கேற்று மக்களின் பிரச்சினைகளை எடுத்துரைக்க வேண்டும் என்றும், கூட்டத்தை பாதியில் விட்டு வெளியேறுவது ஜனநாயகத்திற்கு உகந்த நடைமுறை அல்ல என்றும் தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.