மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே கொசவபட்டி கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்

இங்கு உள்ள தெருக்களில் கழிவு நீர் வெளியேராமல் தேங்கி சுகாதார கேடு ஏற்படுவதாகவும் மழைக்காலங்களில் கழிவுநீர் செல்ல வழி இல்லாததால் வீடுகளுக்குள் கழிவு நீர் செல்வதாலும் பாம்பு தேள் போன்ற விஷ ஜந்துகள் வீட்டிற்குள் வருவதால் உடனடியாக கழிவுநீர் கால்வாய் கட்டித்தர பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்
இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சுமார் 10 லட்சம் மதிப்பில் செல்லம்பட்டி யூனியன் அலுவலகம் மூலம் முதலைக்குளம் ஊராட்சி சார்பில் கழிவுநீர் கால்வாய் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது

மூன்று தெருக்களில் கழிவுநீர் கால்வாய் பாதி கட்டிய நிலையில் சில தனி நபர்கள் எதிர்ப்பு காரணமாக கழிவுநீர் கால்வாய் கட்டும் பணியை பாதியிலேயே அதிகாரிகள்
நிறுத்தி இருந்தனர்.
இதனால் பொது மக்களின் வீடுகளுக்கு முன்பு கால்வாயில் தேங்கிய கழிவு நீரால் கடுமையான சுகாதார கேடுஏற்பட்டது மேலும் இந்த கழிவுநீர் கால்வாய் பாதி கட்டப்பட்ட நிலையில் கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் வீடுகளுக்கு முன்பு கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசும் நிலைக்கு சென்றது.
இதனால் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு வாந்தி வயிற்றுப்போக்கு காய்ச்சல் ஏற்பட்டு அடிக்கடி மருத்துவமனைக்கு செல்லக்கூடிய நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், கடந்த சில மாதங்களாக பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
பொதுமக்களின் தொடர் போராட்டத்தை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த வட்டார வளர்ச்சி அதிகாரிகள், கழிவுநீர் வெளியேறுவதற்கான வழித்தடத்தை அளவீடு செய்து பணிகளைத் தொடங்க முற்பட்டனர்.
அதிகாரிகள் அளவீடு செய்த கழிவுநீர் வழித்தடப் பகுதியில், சில தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கழிவுநீர் கால்வாய் அமைக்க அந்த தனிநபர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் மீண்டும் சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
காவல்துறையின் பாதுகாப்புடன், ஜேசிபி (JCB) இயந்திரம் கொண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கியது. அப்போது, ஆக்கிரமிப்பில் ஈடுபட்டிருந்த தனிநபர்கள் காவல்துறையினரிடமும், அங்கிருந்த பொதுமக்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து கொசவபட்டி கிராம மக்கள் கூறுகையில்:
நாங்கள் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக கழிவுநீர் கால்வாய் பிரச்சினைக்காகத் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறோம்.
எங்கள் கிராமத்திற்கு கழிவுநீர் கால்வாய் அமைக்க அரசு தரப்பில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், தனிநபர்களின் ஆக்கிரமிப்பால் இந்த பணி தொடர்ந்து தடைபட்டு வருகிறது.

பொதுமக்களுக்கு இடையூறாக ஆக்கிரமிப்பு செய்துள்ள நபர்கள் மீது அரசு உடனடியாகச் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி, கழிவுநீர் செல்ல நிரந்தர வழித்தடம் அமைக்கும் வரை எங்கள் போராட்டம் ஓயாது. என்று கூறினார்கள்.
கழிவுநீர் கால்வாய் கட்டும் பகுதியில் சில தனி நபர்கள் ஆக்கிரமித்து வைத்துள்ள இடங்களை அகற்ற மறுப்பு தெரிவித்துள்ள நிலையில்
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் கூறுகையில் முறைப்படி ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி ஏழு நாட்கள் அவகாசம் கொடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.
கழிவுநீர் கால்வாய் கட்டுவதில் வருவாய் துறையினர் காவல் துறையினர் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாகவும் இதன் காரணமாகவே கழிவுநீர் கால்வாய் கட்டுவதில் தாமதம் ஏற்படுவதாகவும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முருகன் குற்றம் சாட்டினார் மேலும் விக்கிரமங்கலம் காவல் நிலைய அதிகாரிகள் ஒருதலை பட்சமாக செயல்படுவதால் வேறு தாலுகாவிலிருந்து காவல் துறை அதிகாரிகளை வரவழைத்து கழிவுநீர் கால்வாய் கட்டும் நடவடிக்கைகான பாதுகாப்பு பணியை மேற்கொள்ள வேண்டும்.

இது குறித்து மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்க உள்ளதாகவும்
மேலும் மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தலையிட்டு அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மூன்று தினங்களுக்குள் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணிகளை தொடங்காவிட்டால் பொதுமக்களை ஒன்று திரட்டி செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மிகப்பெரிய மறியல் போராட்டத்தை நடத்தப் போவதாகவும் அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார் சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் 15 நாட்களுக்கு மேலாக தங்களின் அன்றாட பணிகளுக்கு செல்லாமல் வீட்டில் இருப்பதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் ஆகையால் அதிகாரிகள் உடனடியாக இந்த பிரச்சனைக்கு ஒரு சுமூக தீர்வு காண வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.




