• Sat. Apr 26th, 2025

போராட்டம் தொடரும் – எல்.பி.ஜி லாரி உரிமையாளர்கள்

BySeenu

Mar 28, 2025

தென் மண்டல எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர் வேலை நிறுத்ததை முடிவுக்கு கொண்டு வர எண்ணெய் நிறுவனங்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. தங்களது போராட்டம் தொடர்வதாக எல்.பி.ஜி லாரி உரிமையாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

எல்.பி.ஜி டேங்கர் லாரிகளை எண்ணை நிறுவனங்களுக்கு டெண்டர் விடுவது தொடர்பாக புதிய விதிமுறைகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த புதிய விதிமுறைகளை தளர்த்த கோரி தென்மண்டல எல்.பி.ஜி லாரி உரிமையாளர் சங்கத்தினர் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இந்நிலையில் இன்று கோவையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் எண்ணை நிறுவன அதிகாரிகள் ,
தென்மண்டல எல்.பி.ஜி லாரி உரிமையாளர் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். லாரி உரிமையாளர் சங்கத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர்கள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். ஐ.ஒ.சி, பி.பி.சி, எச்.பி.சி எண்ணை நிறுவனங்களில் மும்மையில் இருந்து செயல் இயக்குனர் பொறுப்புகளில் இருக்கும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

டெண்டர் விடுவதற்கு எண்ணை நிறுவனங்கள் அறிவித்து உள்ள புதிய கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும். ஏற்கனவே நடைமுறையில் உள்ள இரண்டு ஆக்சில் லாரிகளை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை லாரி உரிமையாளர் சங்கத்தினர் வலியுறுத்தினர். சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தையில் பங்கேற்று உள்ள எல்.பி.ஜி லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகளின் செல்போன்கள் தனியாக வாங்கி வைக்கப்பட்டது.

இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் எந்த உடன்பாடும் ஏற்கவில்லை. பேச்சுவார்த்தைக்கு பின்னர் தென் மண்டல எல்.பி.ஜி லாரி உரிமையாளர் சங்க தலைவர் சுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது
3 ஆயில் நிறுவனங்களும் டெண்டர் வழங்கி உள்ளனர் எனவும், இதில் லாரி உரிமையாளர்களுக்கு பாதகமான அம்சங்கள் இருப்பதால் விதிகளை மாற்ற கோரிக்கை விடுத்து இருந்தோம் எனவும், ஆனால் அவர்கள் தெரிவித்த
விதிமுறைகள் லாரி உரிமையாளர்களுக்கு ஏற்புடையதாக இல்லை என்பதால் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தினை துவங்கி இருப்பதாக தெரிவித்தார்.
இன்று நடந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லை எனவும், முக்கிய பிரச்சினைகளை அதிகாரிகள் தீர்க்கவில்லை என்பதால் காலவரையறை வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்கின்றோம் எனவும் சுந்தர்ராஜன் தெரிவித்தார்.

மும்பையில் இருந்து எண்ணை நிறுவனங்களின் செயல் இயக்குனர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர் எனவும் அவர்கள் உறுதியாக எதையும் சொல்ல வில்லை என்பதால், நாங்களும் எங்களது 1500 உறுப்பினர்களை கலந்து பேசாமல் இப்போது எந்த முடிவை சொல்ல முடியாது காலவரையற்ற போராட்டம் தொடர்வதாக சொல்லி வந்து விட்டோம் என தெரிவித்தார். இதே போல வடக்கு, மேற்கு, கிழக்கு மண்டல லாரி உரிமையாளர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும் தகவல் வந்து உள்ளது என தெரிவித்த அவர்,
எண்ணெய் நிறுவனங்களின் செயல் இயக்குனர்களாக இருக்கும் அதிகாரிகள் தான் பேச்சுவார்த்தை நடத்தினர், எதற்கு எடுத்தாலும் ஜெய்பூர் ஆக்ஸிடென்ட்டை உதாரணமாக சொல்கின்றனர் எனவும் தெரிவித்தனர். மேலும் எல்.பி.ஜி லாரிகளுக்கு
அபராதம் விதிப்பதை கைவிட வேண்டும் என்று கேட்டு இருக்கின்றோம் எனவும், இந்த போராட்டம் தொடர்ந்தால் மூன்று நாட்களில் மக்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தார். தங்களது பிரச்சினையில் தலையிட வேண்டும் என தமிழக முதல்வர் , பெட்ரோலிய அமைச்சர் ஆகியோரிடம் முறையிட இருக்கின்றோம் எனவும் தெரிவித்தனர்.

பாதுகாப்பு என்ற காரணத்திற்காக அபராத தொகையினை விதிப்பது ஏற்புடையதல்ல எனவும், லாரிகளில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தபட்டு உள்ளது எனவும், ஆனால்
கிளினர் இல்லை என்றால் 20 ஆயிரம் அபராதம் என்பதை ஏற்க முடியாது எனவும், கண்டிப்பாக கிளினர் தேவை என வாகன சட்டத்தில் இல்லை எனவும், ஆனால் வாகன சட்டத்தை மீறி இவர்கள் தேவைக்காக கிளினர் தேவை என கட்டாயப படுத்துகின்றனர் எனவும் எண்ணை நிறுவனங்கள் மீது குற்றம்சாட்டினார். தென்னிந்தியாவில் கேஸ் லோடு ஏற்ற மாட்டார்கள், இனி மேல் தான் கொஞ்சம் கொஞ்சமாக பாதிப்பு வரும் என தெரிவித்த அவர், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட கூடாது என்பதால் உடனடியாக அதிகாரிகள் இதில் தலையிட்டு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

கோவையில் டேங்கர் லாரி விபத்துக்கு உள்ளானது என்பது , லாரி டிரைவர் கொடுத்த ரூட் மேப்பை பின்பற்றாமல், வழி தெரியாமல் போனதால் ஏற்பட்டது எனவும் தெரிவித்தார்.
கோவை கலெக்டர், கமிஷ்னர் ஆகியோர் லாரி டிரைவர் மீது வழக்கு போட்டு வெளியில் வர முடியாத படி செய்து விட்டனர் எனவும், கோவையில் எல்.பி.ஜி பிளான்ட் இருக்கும் இடம் பாதுகாப்பானது கிடையாது எனவும், இதை மாற்ற வேண்டும் என கோவை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வகத்திடம் சொல்லி இருக்கின்றோம், எங்களிடம் ஆதாரம் இருக்கின்றது எனவும், ஆனால் அதை கண்டு கொள்ளாமல் லாரி டிரைவர் மீது நிறைய வழக்கு போட்டு விட்டனர் எனவும் டேங்கர் லாரி உரிமையாளர்கள் குற்றம்சாட்டினர்.

மேலும் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை தேதி குறித்து இன்னும் சொல்ல வில்லை, நாளை சொல்லுவார்கள் என நினைக்கின்றோம் என தெரிவித்த அவர் தங்களது கோரிக்கையில் நிறைவேற்ற விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தென் மண்டல எல்.பி.ஜி கேஸ் உரிமையாளர் நல சங்க தலைவர் சுந்தராஜன் தெரிவித்தார்.