• Wed. Apr 24th, 2024

எல்பிஜி சிலிண்டர் இணைப்புக் கட்டணம் அதிரடி உயர்வு..!

Byவிஷா

Jun 15, 2022

புதிதாக எல்பிஜி சிலிண்டர் இணைப்புக்கான கட்டணத்தை அதிரடியாக எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.
ஏற்கெனவே நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, அதனால் காய்கறிகள், உணவுப் பொருட்கள் விலை உயர்வால் பணவீக்கம் உச்சத்தில் இருந்து வருகிறது. சிலிண்டர் விலையும் ரூ.ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்த நிலையில் நடுத்தர மக்கள், சாமானிய மக்களுக்கு சம்மட்டி அடிவிழும் விதமாக, தற்போது புதிய இணைப்புக்கான கட்டணத்தை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.
இது குறித்து பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
புதிதாக 14.2 கிலோ எடைகொண்ட ஒரு சிலிண்டர் இணைப்புக்கான கட்டணம் இதற்குமுன் ரூ.1,450 ஆக இருந்தது. இனிமேல் ஒரு சிலிண்டருக்கு ரூ.750 உயர்த்தப்பட்டு, ரூ.2200 ஆக அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் வீடுகளில் பயன்படுத்தும் 14.2 கிலோ எடை 2 சிலிண்டர்கள் இணைப்புடன் புதிய இணைப்பு தேவைப்படுவோருக்கு கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது. அதாவது இதற்கு முன் 2 சிலிண்டர்களுடன் சமையல் கேஸ் புதிய இணைப்புக்கு ரூ,2900 செலுத்த வேண்டியிருந்தது.
ஆனால், புதிய கட்டண உயர்வின்படி 2 சிலிண்டர்களுடன் புதிய இணைப்புக்கு ரூ.4,400 செலுத்த வேண்டும். கூடுதலாக ரெகுலேட்டருக்கு ரூ.150 செலுத்திய நிலையில் அந்தக் கட்டணம் ரூ.250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் 5 கிலோ எடை கொண்ட சிறிய சமையல் சிலிண்டருக்கு வைப்புத் தொகையாக ரூ.800 வசூலிக்கப்பட்டு வந்தது. அந்தக்கட்டணமும் ரூ.1.150 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு 16ம் தேதி முதல்(நாளை) நடைமுறைக்கு வருகிறது.

இந்த புதிய கட்டணம் உயர்வால் பிரதான் மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச சிலிண்டர் இணைப்பு பெற்ற பெண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளது.  இனிமேல் 2-வதாக புதிய சிலிண்டர் இணைப்புக்கு உஜ்வாலா திட்டத்தில் இருக்கும் பெண்கள் விண்ணப்பித்தால் கூடுதல் சிலிண்டர் இணைப்புக் கட்டணம் செலுத்த வேண்டும். உஜ்வாலா திட்டத்தின் கீழ் யாரேனும் புதிய கேஸ் இணைப்பு பெற்றால் முன்கூட்டியே சிலிண்டருக்கான வைப்புத் தொகை செலுத்த வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *