


கர்நாடகா மாநிலத்தில் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
டீசல் விலை மற்றும் சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்து, கர்நாடக லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், மாநிலங்களுக்கு இடையிலான, சரக்கு லாரிகள் சேவையில் பாதிப்பு ஏற்படும் என்றும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து, தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் தனராஜ் தெரிவித்ததாவது..,
”தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகா வழியாக மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு தினமும் 4 ஆயிரம் லாரிகளும், அங்கிருந்து தமிழ்நாட்டிற்கு 3 ஆயிரமும் லாரிகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் இருந்து ஆடைகள், வெல்லம், தேங்காய், மஞ்சள், முட்டை உள்ளிட்ட பொருட்கள் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. பிற மாநிலங்களில் இருந்து, தமிழ்நாட்டிற்கு மக்காச்சோளம், பருப்பு, பூண்டு, எண்ணெய், வெங்காயம் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன.
மேலும், தமிழ்நாடு – கர்நாடகா இடையே தினமும் 700 சரக்கு லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில், 35மூ லாரிகளில் காய்கறிகள், பழங்கள் கொண்டு வரப்படுகிறது. குறிப்பாக தக்காளி, பீட்ரூட், கேரட் போன்றவை கர்நாடகாவில் இருந்து சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு கொண்டு வரப்படுகிறது. எனவே, லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக காய்கறி வரத்தில் பாதிப்பு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. தினசரி வரும் காய்கறி, பழங்கள் வரத்து குறைந்தால், விலைவாசி உயர வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

