மதுரை மாவட்டம் வாலாந்தூர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட லாரி டிரைவர் மர்மமான முறையில் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல் ஆய்வாளர் உட்பட 2 பேரை பணியிடை நீக்கம் செய்து தென்மண்டல ஐஜி உத்தரவிட்டுள்ளதோடு, வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கும் மாற்றியுள்ளார்.

சம்பவத்தின் பின்னணி:
தேனி மாவட்டம் போடியில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான ஏலக்காய் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு, உத்தமபாளையத்தைச் சேர்ந்த ரங்கப்ப நாயக்கர் மகன் பாலகிருஷ்ணன் (42) என்பவர் மதுரை நோக்கி லாரியை ஓட்டி வந்துள்ளார். மதுரை மாவட்டம் வாலாந்தூர் அருகே வந்தபோது, லாரியை நிறுத்திய டிரைவர் பாலகிருஷ்ணன் அதிலிருந்த சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான பாதி ஏலக்காய் மூட்டைகளைக் கையாடல் செய்து விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர், திருட்டை மறைப்பதற்காக லாரிக்குத் தீ வைத்துவிட்டு, அடுத்த 5 நிமிடத்தில் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளார். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து மீதமுள்ள மூட்டைகளைக் காப்பாற்றினர். சம்பவ இடத்திற்கு வந்த ஏலக்காய் வியாபாரி, தான் அனுப்பிய மூட்டைகளை விட குறைவாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து வாலாந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
பேரமும் லாக்கப் மரணமும்:
புகாரைப் பெற்ற வாலாந்தூர் காவல் நிலைய ஆய்வாளர், உடனடியாக வழக்குப்பதிவு செய்யாமல் இழுத்தடித்ததாகக் கூறப்படுகிறது. இன்சூரன்ஸ் கிளைம் செய்வதற்காக சி.எஸ்.ஆர் (CSR) நகல் வழங்குமாறு வியாபாரி கேட்டதைத் தொடர்ந்து, தனிப்பிரிவு (SB) ஏட்டு மூலம் பேரம் பேசப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, 2 கோடி ரூபாய் மதிப்பிலான ஏலக்காய் மூட்டைகளை டிரைவர் பாலகிருஷ்ணன் தான் திருடினார் என்பது தெரியவந்தது. இதையடுத்து, காவல் ஆய்வாளர் மற்றும் தனிப்பிரிவு ஏட்டு ஆகியோர் நேற்று மாலை பாலகிருஷ்ணனைக் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். இந்நிலையில், இன்று அதிகாலை 6.30 மணியளவில் காவல் நிலையக் கழிவறையில் பாலகிருஷ்ணன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.
பிரேதப் பரிசோதனை & உறவினர்கள் போராட்டம்:
இதையடுத்து, உயிரிழந்த டிரைவர் பாலகிருஷ்ணனின் உடலைக் கைப்பற்றிய அதிகாரிகள், பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

போலீசார் கடுமையாகத் தாக்கியதில் பாலகிருஷ்ணன் உயிரிழந்ததாகவும், அதை மறைக்கத் தூக்கில் தொங்கவிட்டு நாடகமாடுவதாகவும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தங்கள் மகன் இறப்புக்குக் காரணமான காவல் ஆய்வாளர் உள்ளிட்ட போலீசாரைக் கைது செய்ய வேண்டும் என்றும், உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உயர் அதிகாரிகள் விசாரணை & அதிரடி நடவடிக்கை:
ஏற்கனவே சட்டம்-ஒழுங்கு விவகாரத்தில் பல்வேறு புகார்கள் எழுந்து வரும் நிலையில், இந்த லாக்கப் மரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மதுரை சரக டிஐஜி மற்றும் மாவட்ட எஸ்பி ஆகியோர் நேரில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, வாலாந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் உட்பட 2 பேரை பணியிடை நீக்கம் (Suspend) செய்தும், இந்த வழக்கை சிபிசிஐடி (CBCID) விசாரணைக்கு மாற்றியும் தென்மண்டல ஐஜி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.