ஏலக்காய் லாரி தீப்பிடித்தது தொடர்பாக மதுரை மாவட்டம், செக்கானூரணி போலீஸ் ஸ்டேஷனில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட ஆறுமுகனூர் டிரைவர் பாலகிருஷ்ணன் (44), நேற்று காலை ஸ்டேஷன் கழிப்பறை ஜன்னலில் சட்டையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இரவில் அவரை ஸ்டேஷனில் விசாரித்ததோடு, கண்காணிப்பில் மெத்தனமாக இருந்ததாக இன்ஸ்பெக்டர் முத்து உட்பட மூவர் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டனர். இவ்வழக்கை விசாரிக்க சி.பி.சி.ஐ.டி.,க்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் தேவாரம் அடுத்துள்ள போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். கம்பத்தில் இருந்து ஏலக்காய் மூட்டை மற்றும் பார்சல்களை ஏற்றிக்கொண்டு, அலங்காநல்லூரில் உள்ள பார்சல் அலுவலகத்திற்குப் புறப்பட்டார்.
மதுரை மாவட்டம் வாலாந்தூர் அருகே வரும்போது லாரியின் பின்பகுதியில் தீப்பிடித்தது. தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். 13 ஏலக்காய் மூட்டைகள் எரிந்தன.
இதுகுறித்து பாலகிருஷ்ணன் புகாரில் வாலாந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து ஏலக்காய் நிறுவனத்தினர் லாரியை ஆய்வு செய்தபோது, 13 மூட்டைகள் மாயமானது தெரிந்தது. பாலகிருஷ்ணன் மீது சந்தேகம் இருப்பதாகப் புகார் கொடுத்தனர். ஆனால் போலீசார் கண்டுகொள்ளாததால் எஸ்.பி., தேவராஜனிடம் புகார் கொடுத்தனர்.
இதையடுத்து பாலகிருஷ்ணனை நேற்று முன்தினம் இரவு விசாரணைக்கு செக்கானூரணி போலீசார் அழைத்தனர். அவரிடம் இன்ஸ்பெக்டர் முத்து உள்ளிட்டோர் விசாரித்தனர். லாரி நிறுத்தியிருந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இரவு முழுவதும் விசாரணை நடந்தது. தன் மீது சந்தேகம் கொண்டு விசாரித்ததால் விரக்தி அடைந்த பாலகிருஷ்ணன், நேற்று காலை 5:45 மணிக்கு சிறுநீர் கழிப்பதாகக் கூறி ஸ்டேஷன் கழிப்பறைக்குச் சென்றார். நீண்ட நேரமாகியும் வரவில்லை. போலீசார் கதவை உடைத்து பார்த்தபோது தான் அணிந்திருந்த சட்டையால் ஜன்னலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. எஸ்.பி., தேவராஜன் நேரில் விசாரித்தார்.
மூவர் ‘சஸ்பெண்ட்’
பொதுவாக இரவில் யாரையும் விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷனில் வைத்திருக்கக் கூடாது என்று உத்தரவு உள்ளது. அதை மீறி இரவு முழுவதும் பாலகிருஷ்ணனை ஸ்டேஷனில் விசாரித்ததோடு, கண்காணிப்பில் மெத்தனமாக இருந்ததாக இன்ஸ்பெக்டர் முத்து, ஏட்டுகள் பழனிவேல், கலைச்செல்வன் ஆகிய மூவரையும் எஸ்.பி., தேவராஜன் ‘சஸ்பெண்ட்’ செய்தார். போலீசாரைக் கண்டித்து செக்கானூரணி மக்கள், அரசியல் கட்சியினர் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.

போலீஸ் கஸ்டடியில் போலீசார் தாக்கியதால்தான் நேரில் ஆய்வு செய்த மாஜிஸ்திரேட், இவ்வழக்கை விசாரிக்க சி.பி.சி.ஐ.டி.,க்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
உறவினர்கள் உடல் வாங்க மறுப்பு மற்றும் சிசிடிவி காட்சி வெளியீடு
இதற்கிடையே, நேற்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பாலகிருஷ்ணனின் உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட நிலையில், உடலை வாங்க உறவினர்கள் மறுத்து விட்டதாகத் தெரிய வருகிறது. மேலும், காவல் நிலையத்தில் அவர் கழிவறைக்குச் செல்லும் சிசிடிவி காட்சி ஒன்று தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீசார் துன்புறுத்தல்
பாலகிருஷ்ணன் மனைவி லதா கூறியதாவது: நேற்று முன்தினம் விசாரணைக்காக எனது கணவரை செக்கானூரணி போலீசார் அழைத்தனர். அப்போது நானும் அவருடன் சென்றிருந்தேன். விசாரணைக்குப் பின்னர் இரவு எங்களை வீட்டிற்கு அனுப்பிவிட்டனர்.
அப்போது, ‘எங்கள் எந்தத் தவறும் இல்லை, ஆனால் போலீசார் தன்னைத் துன்புறுத்துகிறார்கள்’ என என் கணவர் என்னிடம் கூறிப் புலம்பினார்.
மீண்டும் நேற்று விசாரணைக்கு வருமாறு போலீசார் அழைத்ததால் அவர் சென்றார். இந்த முறை நான் அவருடன் செல்லவில்லை. இரவு விசாரணைக்கு சென்ற பின்னர் அவர் எங்களிடம் பேசவில்லை. காலையில் அவர் இறந்து விட்டதாக போலீசார் தகவல் தெரிவித்தனர், என்றார்.