• Mon. Nov 16th, 2026

மருதமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா நிறைவு..,

BySeenu

Nov 16, 2026

கோவை மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி விழாவின் நிறைவு நாளை முன்னிட்டு, வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

முருகப்பெருமானின் முக்கிய விழாக்களில் ஒன்றான கந்த சஷ்டி விழா, கடந்த 10-ஆம் தேதி கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து ஆறு நாட்களாக தினமும் கோ பூஜை, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. மேலும், தினமும் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி, ஆட்டுக்கிடாய் வாகனத்தில் சுப்பிரமணியரும், குதிரை வாகனத்தில் வீரபாகுவும் எழுந்தருளினர். தொடர்ந்து நடைபெற்ற வேல் வாங்கும் நிகழ்ச்சியைத் தொடர்ந்து, மாலை 3.30 மணியளவில் சூரனை வதம் செய்வதற்காக சுப்பிரமணிய சுவாமி புறப்பட்டார்.

அப்போது, பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க சூரசம்ஹார நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். சூரசம்ஹார நிகழ்ச்சியைக் கண்டு தரிசித்த பக்தர்களுக்கு வாழைத்தண்டு பிரசாதமும் வழங்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, கந்த சஷ்டி விழாவின் ஏழாம் நாள் நிகழ்வாக இன்று வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

கோவில் மூலஸ்தான மண்டபத்தில் மயில் வாகனத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு, யாகசாலை பூஜைகளுடன் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில், வள்ளி தேவி வெண்பட்டும், தெய்வானை பச்சைப் பட்டும் அணிந்து மணக்கோலத்தில் காட்சியளித்தனர்.

பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்ச்சியில், உரல் இடித்து பொற்சுண்ணம் பாடும் நிகழ்வும் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு வந்திருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் 2 லட்சத்து 43 ஆயிரத்து 900 ரூபாய் காணிக்கையாகச் செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி வெள்ளை யானை வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி, மாநகர காவல் ஆணையர் திவ்ய பாரதி, தெற்கு துணை ஆணையர் கார்த்திகேயன், இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் விமலா, கோவில் தக்கார் ஜெயக்குமார், முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர் பிரேம்குமார், துணை மேயர் வெற்றிச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கந்த சஷ்டி விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், கோவை மாநகர காவல்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து சிறப்பாகச் செய்திருந்தனர்.