அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வெளிநாடுகளுக்கு தப்புவதை தடுக்க அனைத்து விமான நிலையங்களுக்கு இன்று லுக் அவுட் நோட்டீஸ் தர காவல்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.ரவீந்திரன், விஜய் நல்லதம்பி அளித்த புகாரில் ராஜேந்திர பாலாஜி மீது இரு வழக்குகள் பதியப்பட்டது.
இந்த இரு வழக்குகளில் முன்ஜாமீன் வழங்க கோரி ராஜேந்திர பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு விசாரணையின் போது, ரூ.3 கோடி பணமோசடி புகாரில் 23 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டுள்ளனர்.இதனால் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை நிராகரிக்க வேண்டும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து,அவரது முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த நிலையில்,அரசு வேலை வாங்கி தருவதாக பணமோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய மேலும் 3 தனிப்படைகள் அமைப்பட்டுள்ளது.மதுரை,சென்னையிலும் தனிப்படையினர் முகாமிட்டுள்ள நிலையில் தற்போது கொடைக்கானல், கோவை மற்றும் கேரளாவுக்கு தனிப்படையினர் அங்கு விரைந்துள்ளனர்.
மோசடிப் புகாரில் தலைமறைவாகியுள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிடிக்க இதுவரை 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.அந்த வகையில்,கடந்த 17-ஆம் தேதி முதல் தலைமறைவாக இருந்து வரும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வரும் நிலையில்,இதுகுறித்து விருதுநகர் காவல்துறை கூறுகையில், அவசர அவசரமாக ஆர்ப்பாட்டத்தை முடித்துக் கொண்டு,வெவ்வேறு கார்களில் ராஜேந்திர பாலாஜி மாறி, மாறி சென்றதாக கூறினார்.
இதற்கிடையில்,ராஜேந்திர பாலாஜி பெங்களுருவில் இருப்பதாக தகவல் வெளியான நிலையில்,அவரைப் பிடிக்க தனிப்படை பெங்களூருக்கு விரைந்து தேடி வருகிறது.இந்நிலையில்,பணமோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக காவல்துறையினர் இன்று லுக் அவுட் நோட்டீஸ் வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ராஜேந்திர பாலாஜி வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் அனைத்து விமான நிலையங்களுக்கும் இன்று லுக் அவுட் நோட்டீஸ் தர காவல்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.