• Fri. May 3rd, 2024

பிப்.2ல் திருப்பூரில் உள்ளூர் விடுமுறை

Byவிஷா

Jan 31, 2024

பிப்ரவரி 2ஆம் தேதியன்று திருப்பூர் மாவட்டம் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் பொது விடுமுறை அரசு விடுமுறையை தவிர்த்து உள்ளூர் பண்டிகை, திருவிழாக்களுக்கு உள்ளூர் விடுமுறைகள் அறிவிக்கப்படுவதுண்டு. இந்த விடுமுறைக்கான உத்தரவை மாவட்ட கலெக்டர் பிறப்பிக்கலாம். அந்த வகையில் திருப்பூரில் பிப்ரவரி 2ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கொங்கு மண்டலத்தில் அமைந்துள்ள முக்கியமான ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்றது அவிநாசிலிங்கேஸ்வரர் திருக்கோவில். இந்த கோவில் முதலை விழுங்கிய சிறுவனை சுந்தரர் நாயனார் தேவார பதிகம் பாடி மீண்டும் உயிருடன் உயிர்ப்பித்த திருத்தலமாக போற்றி வணங்கப்பட்டு வருகிறது.
கருணாம்பிகையம்மன் உடனாய அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா பிப்ரவரி 2ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக ஜனவரி 24ம் தேதி மகா கணபதி யாக பூஜை தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அவிநாசியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்ட தீர்த்த குட ஊர்வலம் நேற்று நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, பிப்ரவரி 2ம் தேதி திருப்பூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடு செய்யும் வகையில் பிப்ரவரி 3ம் தேதி பணி நாளாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *