• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்

Byவிஷா

Mar 22, 2023

நற்றிணைப் பாடல் 142:

வான் இகுபு சொரிந்த வயங்கு பெயற்கடை நாள்
பாணி கொண்ட பல் கால் மெல் உறி
ஞெலி கோல் கலப்பை அதளடு சுருக்கி
பறிப் புறத்து இட்ட பால் நொடை இடையன்
நுண் பல் துவலை ஒரு திறம் நனைப்ப
தண்டு கால் வைத்த ஒடுங்கு நிலை மடி விளி
சிறு தலைத் தொழுதி ஏமார்த்து அல்கும்
புறவினதுவே பொய்யா யாணர்
அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்
முல்லை சான்ற கற்பின்
மெல் இயற் குறுமகள் உறைவின் ஊரே

பாடியவர்: இடைக்காடனார்
திணை: முல்லை

பொருள்:

பிரிவை ஆற்றிக்கொண்டிருத்தல் முல்லை. 
இந்தப் பாங்கு நிறைந்த கற்பினை உடையவள் என் குறுமகள். அவள் மென்மையான இயல்பினை உடையவள். இரவில் விருந்து வந்தாலும் மகிழ்ச்சி கொள்பவள். அவள் இருக்கும் ஊர் முல்லை நிலத்தில் இருக்கிறது. வானமே இடிந்து விழுவது போல மழை பொழிந்திருக்கும் கடைசி நாள். தொங்கல் கயிற்றின் காலில் பண்ணிய முடிச்சுடன் (பாணி) கூடிய உறி, தோல் பையில் (அதள் கலப்பை) தீ மூட்டும் ஞெலிகோல், முதுகில் பால் பானை ஆகியவற்றுடன் சென்ற இடையன் பால் விற்று மீள்கிறான். தூறல் மழையின் திவலைகள் அவனை நனைத்துக்கொண்டிருக்கின்றன. கையிலிருக்கும் ஊன்றுகோலில் ஒடுங்கிக்கொண்டு அவன் நிற்கிறான். வாயிலே ‘மடி’ ஒலி எழுப்புகிறான். ஆட்டு மந்தை (சிறுதலைத் தொழுதி) பாதுகாப்பாக அவனிடம் நிற்கின்றது. பொய்யாத புது வருவாய் (யாணர்) உடையவன் அவன். அவன் இருக்ககும் முல்லை நிலந்தான் என் குறுமகள் இருக்கும் ஊர். தலைவன் தன் பாங்கனிடம் இப்படிக் கூறுகிறான்.