• Sat. Apr 27th, 2024

இலக்கியம்

Byவிஷா

Mar 21, 2023

நற்றிணைப் பாடல் 141:

இருஞ் சேறு ஆடிய கொடுங் கவுள் கய வாய்
மாரி யானையின் மருங்குல் தீண்டி
பொரி அரை ஞெமிர்ந்த புழற் காய்க் கொன்றை
நீடிய சடையோடு ஆடா மேனிக்
குன்று உறை தவசியர் போலப் பல உடன்
என்றூழ் நீள் இடைப் பொற்பத் தோன்றும்
அருஞ் சுரம் எளியமன் நினக்கே பருந்து பட
பாண்டிலொடு பொருத பல் பிணர்த் தடக் கை
ஏந்து கோட்டு யானை இசை வெங் கிள்ளி
வம்பு அணி உயர் கொடி அம்பர் சூழ்ந்த
அரிசில் அம் தண் அறல் அன்ன இவள்
விரி ஒலி கூந்தல் விட்டு அமைகலனே

பாடியவர்: சல்லியங் குமரனார்
திணை: பாலை

பொருள்:

தலைவன் தன் நெஞ்சோடு பேசுகிறான். 
நெஞ்சே கடத்தற்கு அரிய காட்டில் செல்லுதல் உனக்கு எளிது. சுரம் – வளைந்த காதுகளைக் கொண்ட குட்டி யானை கருஞ்சேற்றில் நீராடிவிட்டு மாரி போல் பால் சுரக்கும் தாய்-யானையின் மடியில் பால் குடிக்கும். பூத்துக் காய்த்துக் குலுங்கும் கொன்றை மரத்தடியில் பால் குடிக்கும். இந்தக் காட்சியானது நீண்ட சடையுடன், நீராடாத மேனியுடன் குன்றின்மேல் அமர்ந்து தவம் செய்யும் தவசியர் போல் தோன்றும். இத்தகையது அந்தச் சுரம்.

நான் கிள்ளி ஆளும் அம்பர் போன்ற கூந்தலை உடைய இவளை விட்டுவிட்டு வரமாட்டேன். இவள் – அரிசில் ஆற்று மணல் படிவு போன்ற கூந்தலை உடையவள். அரிசில் – அம்பர் நாட்டில் உள்ளது. அம்பர் – அம்பர் நாட்டு அரசன் இசைவெங் கிள்ளி. அவன் நாட்டில் புதுப்புது நாட்டுக் கொடிகள் பறக்கும். இசைவெங்கிள்ளி – பல மடிப்புகளை உடைய வலிமையான கையையும், அண்ணாந்து ஏந்திய கொம்புகளையும் உடைய யானைமேல் சென்று, பாண்டில் (பாண்டியன்) மன்னனோடு போரிட்டவன். பருந்துகள் விருந்துண்டு பறக்கும் போர் அது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *