• Sun. Jun 4th, 2023

இலக்கியம்

Byவிஷா

Mar 23, 2023

நற்றிணைப் பாடல் 143:

ஐதே கம்ம யானே ஒய்யென
தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்து
ஓரை ஆயமும் நொச்சியும் காண்தொறும்
நீர் வார் கண்ணேன் கலுழும் என்னினும்
கிள்ளையும் கிளை எனக் கூஉம் இளையோள்
வழு இலள் அம்ம தானே குழீஇ
அம்பல் மூதூர் அலர் வாய்ப் பெண்டிர்
இன்னா இன் உரை கேட்ட சில் நாள்
அறியேன் போல உயிரேன்
நறிய நாறும் நின் கதுப்பு என்றேனே

பாடியவர்: கண்ணகாரன் கொற்றனார்
திணை: பாலை

பொருள்:

வீட்டு முற்றத்தில் மணல் பரப்பப்பட்டிருக்கிறது. அங்கே என் மகளுடன் சேர்ந்து ஓரை விளையாடிய தோழிமாரைப் பார்க்கிறேன். அவள் விளையாடிய நொச்சி நிழலையும் பார்க்கிறேன். இவற்றைப் பார்க்கும்போதெல்லாம் என் கண்களில் நீர் கசிகிறது. அவள் வளர்த்த கிளி ‘கிளை’ (உறவுக்காரி எங்கே) என்று கேட்பது போலக் கூச்சலிடுகிறது. இவை இப்படியிருக்க, என் மகள் குற்றமற்றவள் என்பதை உணர்கிறேன். ஊரே ஆங்காங்கே கூடிக் கமுக்கமாகப் பேசிக்கொண்டிருந்தது. அப்போது அவற்றைக் கண்டுகொள்ளாதவள் போல மூச்சு விடாமல் இருந்தேன். ’உன் கூந்தலில் புதுமணம் கமழ்கிறது’ என்று அவளிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். இப்போது என் மகள் என்னை விட்டுவிட்டுப் போய்விட்டாள். என்ன செய்வேன் என்று தாய் கலங்குகிறாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *