• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்

Byவிஷா

Mar 16, 2023

நற்றிணைப் பாடல் 137:

தண்ணிய கமழும் தாழ் இருங் கூந்தல்
தட மென் பணைத் தோள் மட நல்லோள்வயின்
பிரியச் சூழ்ந்தனை ஆயின் அரியது ஒன்று
எய்தினை வாழிய நெஞ்சே செவ் வரை
அருவி ஆன்ற நீர் இல் நீள் இடை
கயந் தலை மடப் பிடி உயங்கு பசி களைஇயர்
பெருங் களிறு தொலைத்த முடத் தாள் ஓமை
அருஞ் சுரம் செல்வோர்க்கு அல்குநிழல் ஆகும்
குன்ற வைப்பின் கானம்
சென்று சேண் அகறல் வல்லிய நீயே

பாடியவர்: பெருங்கண்ணனார்
திணை: பாலை

பொருள்:

குளுமையும் மணமும் கொண்டு தாழ்ந்து இருண்டிருக்கும் கூந்தலை உடையவள் அவள். அகன்ற மென்மையான பருத்த தோளினை உடையவள். மடமை மிக்க நல்லவள். நெஞ்சே! அவளைப் பிரிய எண்ணினால், அரியதொன்றை நீ செய்தாக வேண்டும். செங்குத்தான மலை. நீர் கொட்ட வேண்டிய அருவி அங்கே வறண்டு கிடக்கும். அந்த வழியில் நீ செல்லவேண்டி இருக்கும். அங்கே ஆண்யானை தன் பெண்யானையின் பசியைப் போக்க வளைந்திருக்கும் ஓமை மரத்தை ஒடித்திருக்கும். அந்த மரம்தான் அந்த வழியில் செல்லும் உனக்குத் தங்கும் நிழல். இந்தக் குன்றுமலைக் காட்டில் நெடுந்தூரம் செல்லும் வலிமை உனக்கு இருக்கிறது. எனக்கு அவள் நினைவுதான், என்கிறான் தலைவன்.