• Sat. Apr 20th, 2024

இலக்கியம்

Byவிஷா

Mar 17, 2023

நற்றிணைப் பாடல் 138:

உவர் விளை உப்பின் குன்று போல்குப்பை
மலை உய்த்துப் பகரும் நிலையா வாழ்க்கை
கணம் கொள் உமணர் உயங்குவயின் ஒழித்த
பண் அழி பழம் பார் வெண் குருகு ஈனும்
தண்ணம் துறைவன் முன் நாள் நம்மொடு
பாசடைக் கலித்த கணைக் கால் நெய்தல்
பூவுடன் நெறிதரு தொடலை தைஇ
கண் அறிவுடைமை அல்லது நுண் வினை
இழை அணி அல்குல் விழவு ஆடு மகளிர்
முழங்கு திரை இன் சீர் தூங்கும்
அழுங்கல் மூதூர் அறிந்தன்றோ இன்றே

பாடியவர்: அம்மூவனார்
திணை: நெய்தல்

பொருள்:

குன்று போல் குவித்து வைத்திருக்கும் உவர் நீரில் விளைந்த உப்பை ஏற்றிக் கொண்டு போய் மலைநாட்டில் விற்கும் நிலையில்லாத வாழ்க்கையை உடையவர் உமணர் கூட்டத்தார். பார் ஒடிந்த வண்டியை அவர்கள் வழியில் விட்டுச் செல்வர். அந்த வண்டிக்கு அடியில் வெண்ணிறக் குருகு முட்டையிட்டும். இப்படிப்பட்ட துறையை உடையவன் தண்ணந் துறைவன். அவன் முன்னொரு நாள் நம்மோடு சேர்ந்து பண்ணிசை முழக்கத்திற்கு ஏற்ப ஆடினான். பசுமையான இலைகளுக்கு இடையே பருத்த காம்புடன் பூத்திருக்கும் நெய்தல் பூக்களை நம்முடன் சேர்ந்து பறித்து வந்து நமக்குத் தொடலை என்னும் தழையாடையாகத் தைத்துக் கொடுத்தான். கண்ணோட்ட அறிவு (இரக்க உணர்வு) அவனுக்கு உண்டு. மகளிர் இடையில் (அல்குல்) நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்ட அணிகலன்களை அணிந்துகொண்டு விழாக் காலத்தில் ஆடுவர். கடலின் அலை முழக்கத்துடன் சேர்ந்து ஆடுவர். அவனும் அவர்களோடு சேர்ந்து ஆடினான். இப்போது அவனைப் பற்றிப் பலவாறு பேசும் ஊர் மக்கள் அவன் ஆடுவதற்கு முன்பு அவனை அறிந்ததே இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *