• Tue. Apr 23rd, 2024

இலக்கியம்

Byவிஷா

Jan 4, 2023

நற்றிணைப் பாடல் 93:

”பிரசம் தூங்க, பெரும் பழம் துணர,
வரை வெள் அருவி மாலையின் இழிதர,
கூலம் எல்லாம் புலம்புஉக, நாளும்
மல்லற்று அம்ம, இம் மலை கெழு வெற்பு!” எனப்
பிரிந்தோர் இரங்கும் பெருங் கல் நாட!
செல்கம்; எழுமேர் சிறக்க, நின் ஊழி!
மருங்கு மறைத்த திருந்து இழைப் பணைத் தோள்,
நல்கூர் நுசுப்பின், மெல் இயல், குறுமகள்
பூண் தாழ் ஆகம் நாண் அட வருந்திய
பழங்கண் மாமையும் உடைய் தழங்கு குரல்
மயிர்க் கண் முரசினோரும் முன்
உயிர்க் குறியெதிர்ப்பை பெறல் அருங்குரைத்தே.

பாடியவர்: மலையனார் பாடல்
திணை: குறிஞ்சி

பொருள்:
தலைவியை மணந்துகொள்ளும்படி, பாங்கன் தலைவனை வேண்டுகிறான்.

நீ உயர்ந்த மலைகளைக் கொண்ட நாட்டை உடையவன். அந்த மலைகளிலே தேன்கூடு தொங்கும். பெரிய பலாப்பழங்கள் கொத்துக்கொத்தாக இருக்கும். பாறையிலிருந்து மலையருவி வெள்ளை வெளேரெனக் கொட்டும். மலையில் விளையும் பொருள்கள் எல்லாம் புலம்பிக்கொண்டு அந்த அருவி நீரின் வழியே நிலத்துக்கு ஓடிவரும். எல்லா நாளும் இப்படிப்பட்ட வளம் கொழிக்கும் நாடு, உன் நாடு. நாம் செல்லலாம். எழுந்திரு. உன் வாழ்நாள் சிறப்புக் கொள்வதாகட்டும்.  
அவள் உன்னுடையவள். பருத்த தோளின் பக்கம் மறையும்படிச் செம்மையான அணிகலன்களைக் கொண்டவள். மென்மையாக அடி வைத்து நடக்கும் பாங்கினள். உருவத்தில் சிறியவள்.  அணிகலப் பூண் தொங்கும் அவள் மார்பகம் நாணத்தால் தின்னப்பட்டு மாந்தளிர் நிறத்தோடு வருந்திக்கொண்டிருக்கும். 

சீவாத தோலால் போர்த்தப்பட்ட முரசினை முழக்கும் அரசர் ஆயினும் உன் உயிரினைக் கடன் வாங்கித் திருப்பித் தர முடியுமா. (அவளை நினைத்து உன் உயிர் போய்க்கொண்டிருக்கிறது.) எனவே அவளை மணந்துகொள்ளச் செல்லலாம். எழுந்திரு என்று பாங்கன் கூறுகிறான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *