• Wed. Apr 24th, 2024

இலக்கியம்

Byவிஷா

Jan 3, 2023

நற்றிணைப் பாடல் 92:

உள்ளார் கொல்லோ தோழி! துணையொடு
வேனில் ஓதி பாடு நடை வழலை
வரி மரல் நுகும்பின் வாடி, அவண
வறன் பொருந்து குன்றத்து உச்சி கவாஅன்
வேட்டச் சீறூர் அகன் கண் கேணிப்
பய நிரைக்கு எடுத்த மணி நீர்ப் பத்தர்,
புன் தலை மடப் பிடி கன்றோடு ஆர,
வில் கடிந்து ஊட்டின பெயரும்
கொல் களிற்று ஒருத்தல் சுரன் இறந்தோரே!

பாடியவர்: பெருந்தேவனார்
திணை: பாலை

பொருள்:

கொடிய வழியில் செல்லும்போதும் அவர் என்னை நினைக்கமாட்டார் போல் இருக்கிறதே! ஒரு தும்மல் கூட வரவில்லையே, என்பது அவள் ஏக்கம். யாராவது நினைத்தால் தும்மல் ஒரும் என்பது நம்பிக்கை.

உள்ளார் கொல்லோ தோழி!
ஓதி என்பது ஓந்தி.
வழலை என்பது பாம்பு.
மரல் என்பது போலிநீர்.
நுகும்பு என்பது நுங்குபோல் தெரியும் பனிமூட்டம்.
பனிமூட்டம் போன்ற பொய்நீராகிய மரல்நீரே அங்குத் தென்படும் நீர். ஓந்தியும் பாம்பும் வாடிக் கிடக்கும் வழியில் அவர் சென்றுள்ளார். துணையொடு வேனில் ஓதி பாடு நடை வழலை வரி மரல் நுகும்பின் வாடி, வறண்ட குன்றத்து உச்சி மலைப் பிளவில் வேட்டுவர் வாழும் சிற்றூரில் ஆடுமாடுகள் நீர் உண்ண அகலமான நீர்க்கேணி தோண்டி வைத்திருப்பர். அது நீலநிற நீரைக் கொண்ட பத்தர் என்னும் குழிக்கேணி. அந்தக் கேணிப் பத்தர் அருகில் வேட்டுவர் கொடிய விலங்குகளை வேட்டையாட வில்லுப்பொறி அமைத்திருப்பர். அந்த வில்லுப்பொறியைத் தகர்த்த ஆண்யானை தன் பெண்யானைக்கும், கன்றுக்கும் அந்தப் பத்தர்கேணியில் நீரூட்டி அழைத்துச் செல்லும். இப்படிப்பட்ட பாலைநிலக் காட்டு வழியில் அவர் செல்கிறார். செல்லும்போது நம்மை நினைக்கமாட்டார் போல் இருக்கிறது. வறன் பொருந்து குன்றத்து உச்சி கவாஅன் வேட்டச் சீறூர் அகன் கண் கேணிப் பய நிரைக்கு எடுத்த மணி நீர்ப் பத்தர், புன் தலை மடப் பிடி கன்றோடு ஆர, வில் கடிந்து ஊட்டின பெயரும் கொல் களிற்று ஒருத்தல் சுரன் இறந்தோரே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *