நற்றிணைப் பாடல் 86:
அறவர், வாழி தோழி! மறவர்
வேல் என விரிந்த கதுப்பின் தோல
பாண்டில் ஒப்பின் பகன்றை மலரும்
கடும் பனி அற்சிரம், நடுங்க, காண்தகக்
கை வல் வினைவன் தையுபு சொரிந்த
சுரிதக உருவின ஆகிப் பெரிய
கோங்கம் குவி முகை அவிழ, ஈங்கை
நல் தளிர் நயவர நுடங்கும்
முற்றா வேனில் முன்னி வந்தோரே!
பாடியவர்: நக்கீரர்
திணை: பாலை
பொருள்:
தலைவன் தலைவி பற்றிய வாழ்க்கை அகப்பொருள். அகப்பொருள் வாழ்க்கைநெறியில் தலைவன் தலைவியருக்குத் துணை புரிவோர் வாயில்கள். இந்த வாயிகளில் ஒருவர் அறவர். தலைவன் பொருள் தேடும் வினை முடிந்து வந்துகொண்டிருக்கிறான் என்னும் செய்தியை அறவர் தலைவிக்குச் சொல்கிறார். அதனைக் கேட்ட தோழி தலைவிக்குத் தெரிவிக்கிறாள். அறவர் வாழ்க! தோழி! அறவர் சொன்னதைக் கேட்பாயாக. வேண்டிய பொருளைத் திரட்டிக்கொண்டு இளவேனில் காலத்தில் திரும்பிவிடுவேன் என்று சொன்ன காதலர் அவ்வாறே காலம் தவறாமல் வந்துகொண்டிருக்கிறார்.
கடும்பனி அற்சிரம் ஸ்ரீ கடும்பனி பொழியும் முன்பனிக் காலம்.
பகன்றைப் பூ மலரும் காலம். பகன்றை பாண்டில் என்னும் கூட்டுவண்டி போல் மலரும் காலம். பாண்டில் என்னும் வட்டி போல் மலரும் எனக் கூறுவாரும் உளர். பகன்றை வேல் போல் விரிந்து கதுப்பின் (கன்னம்) தோல் போல் காணப்படும்.
கோங்கம் மலரும் காலம். கைத்திறம் மிக்க கலைஞன் (வினைவன்) தைத்துத் தந்த சுரிதகம் போல் மலரும் கடும்பனி அற்சிரக் காலம். (சுரிதகம் ஸ்ரீ தலைமுடிப் பின்னலில் திருகி வைத்துக்கொள்ளும் மணி பதித்த பொன்னணி | கலிப்பாவில் கருத்துக்களை முடித்துவைக்கும் முடிப்புரை சுரிதகம் எனப்படுதல் காண்க)
ஈங்கை மலர் பூக்கும் தளிர் அசைந்தாடும் அற்சிரக் காலம். இப்படிப்பட்ட இளவேனில் காலத்தில் நம் நினைவோடு திரும்பி வருகிறார்.