தி.மு.க.வில் உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி வரப் போகிறது என்று அரசல் புரசலாக தகவல்கள் கசிந்து வரும் நிலையில், மகாராஷ்டிராவில் ஏக்நாத்ஷிண்டே வெளியேறியது போல், தமிழகத்திலும் தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் வெளியே வருவார்கள் என பாஜக தேசிய சிறுபான்மைப் பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் அதை தொடர்ந்து நடைப்பெற்ற சட்டமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நிகராக உதயநிதி ஸ்டாலினும் பரப்புரையில் ஈடுபட்டார். அதோடு சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வும் ஆனார். திமுக கட்சி விளம்பரங்களில் பெரியார், அண்ணா, கலைஞர், ஸ்டாலின் படங்களோடு உதயநிதி படமும் இடம்பெற்றது. சட்டமன்றத்தில் உரையாற்றும் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் கூட உதயநிதி பெயரை உச்சரிக்க மறந்தது இல்லை, அப்படிப்பட்ட நிலையில், விரைவில் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் திமுகவிற்குள் பிரச்சனை ஏற்படும் என அதிமுக, பாஜக கூறி வரும் நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாஜக தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம்..,
மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சிக்குள் ஏற்பட்ட பிளவால் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியேறியநிலையில், அங்கு பா.ஜ.க ஆதரவில் ஏக்நாத் ஷிண்டே ஆட்சி அமைத்ததாக தெரிவித்தார். இதுபோன்ற நிலையிலே தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி நடந்து வருவதாகவும், முதல்வர் ஸ்டாலின் தன் மகன் உதயநிதிக்கு மகுடம் சூட்டுவதை திமுக மூத்த நிர்வாகிகளும், சட்டமன்ற உறுப்பினர்களும் விரும்பவில்லையென தெரிவித்தார். இதனால் ஏக்நாத் ஷிண்டே போல் ஒரு குழு உருவாகும் சூழல் உள்ளதாக தெரிவித்தார். தி.மு.க.,வின் ஸ்லீப்பர் செல்கள் பா.ஜ.,வில் சேர வாய்ப்புள்ளதாகவும் கூறினார். தமிழகத்தை இரண்டாக பிரிக்கும் நோக்கம் பா.ஜ.,விடம் இல்லையென தெரிவித்தார். தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, தனித்தமிழ்நாடு எனக் கூறுவதை பா.ஜ., வேடிக்கை பார்க்காது என்றும் இதற்க்கு தக்க பதிலடி கொடுக்கும் என எச்சரிக்கை விடுத்தார்.