• Wed. Apr 17th, 2024

தேனியில் இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48 திட்டம் குறித்து ஆலோசனைக் கூட்டம்

தேனி கலெக்டர் அலுவலகத்தில் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48 திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம், கலெக்டர் முரளீதரன் தலைமையில் நடந்தது.


தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன், மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் லட்சுமணன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெகவீரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கலெக்டர் பேசியதாவது:


தமிழகத்தில் சாலை விபத்தினால் ஏற்படும் உயிர் இழப்புகளை குறைத்திடும் பொருட்டு, இன்னுயிர் காப்போம் திட்டத்தினை தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.


இத்திட்டத்தின் முக்கிய அங்கமாக, சாலை விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ சிகிச்சை செலவை தமிழ்நாடு அரசே மேற்கொள்ளும் வகையில் இன்னுயிர் காப்போம் – நம்மைக்காக்கும் 48-என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்திற்கென தேனி மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 6 அரசு மருத்துவமனைகள் மற்றும் 6 தனியார் மருத்துவமனைகள் என, மொத்தம் 12 மருத்துவமனைகள் உரிய தகுதியின் அடிப்படையில், இணைக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. சாலை விபத்துக்களில் காயமடைந்தவர்களுக்கு விபத்து ஏற்பட்ட முதல் 48 நேரம் மிக முக்கியம் என்பதனை கருத்தில் கொண்டு, இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 


இத்திட்டத்தின்  மூலம் முதல்வரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை உடையவர்கள், இல்லாதவர்கள், பிற மாநிலத்தவர், வெளிநாட்டவர் என, அனைவருக்கும் வருமான வரம்பு ஏதும் கணக்கில் கொள்ளாமல், சாலை விபத்துககளில் காயமடைந்தோர்களுக்கு முதல் 48 நேரம் வரை கட்டணமின்றி மருத்துவ சிகிச்சை அளித்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட 81 மருத்துவ சிகிச்சை முறைகளுக்கு நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சம் வரை செலவினத்தில் சிகிச்சை சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர் உள்நோயாளியாக அனுதிக்கப்படும். இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48 திட்டத்தில், அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் பற்றிய விபரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் குறித்து, மேலும் விபரங்கள் அறிய ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் 104 குறித்து பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி, உயிர் காக்கும் சேவையினை அனைவரும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *