• Tue. Dec 10th, 2024

கருணை கொலை செய்து விடுங்கள் – கண்ணீருடன் ஆட்சியரிடம் மனு கொடுத்த மூதாட்டி!..

Byமதி

Oct 5, 2021

மயிலாடுதுறை மாவட்டம் வாணாதிராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் 90 வயது மூதாட்டி தாவூத் பீவி. இவருக்கு 2 மகன்கள் மற்றும் மகள் உள்ளனர். கணவரை இழந்த இவர், தனது மகன்கள் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், இளைய மகன் அசரப் அலி வெளிநாடு சென்றதும், தாவூத் பீவியை அவரது மருமகள் கடந்தவாரம் வீட்டைவிட்டு வெளியேற்றிவிட்டதாகவும் மூத்த மகனும், மகளும் தாவுத் பீவியை தனது வீட்டில் சேர்த்துக்கொள்ளவில்லை எனக்கூறப்படுகிறது.

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரின் மனுநீதி நாள் முகாமில் கலந்துகொண்ட தாவுத் பீவி, “ஊர் பஞ்சாயத்தார் கூறியும் எனது மகன்கள் மற்றும் மகள் வீட்டிலும் யாரும் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. அக்கம்பக்கத்தினர் அளித்த உணவை மட்டுமே சாப்பிட்டு வருகிறேன். நான் மிகுந்த வேதனையை அனுபவித்து வருகிறேன். என் வீட்டை அவர்களிடமிருந்து மீட்டு, அதை விற்று பணத்தை வங்கியில் வரவு வைத்து தர வேண்டும். அந்த பணத்தில் எனது இறுதிகாலத்தை கழிக்கிறேன். இல்லையென்றால் என்னை கருணை கொலை செய்து விடுங்கள்” என்று கண்ணீருடன் மாவட்ட ஆட்சியரிடம் பீவி முறையிட்டார்.

இதைகேட்ட மாவட்ட ஆட்சியர் லலிதா உடனடியாக மயிலாடுதுறை ஆர்.டி.ஓ பாலாஜி மூலம் பீவியை மூத்தமகன் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். மேலும் குடும்பத்தாரை அழைத்து நிரந்தரதீர்வு காணப்படும் எனவும் ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.