• Fri. Jan 16th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

எடப்பாடியை சந்தித்த லீமா ரோஸ்…என்னதான் நடக்குது?

ByAra

Jan 16, 2026

‘லாட்டரி அதிபர்’ என்று அறியப்படும் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ், ஜனவரி 9 ஆம் தேதி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தார். அவர் அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டதாக செய்திகள் வந்தன. ஆனால் தான் அதிமுகவில் இணையவில்லை என்றும் இந்திய ஜனநாயகக் கட்சியில்தான் தொடர்வதாகவும் விளக்கம் அளித்தார்.

இந்நிலையில், லீமா ரோசின் எடப்பாடியுடனான சந்திப்பு ராமநாதபுரம் மாவட்ட அரசியல் களத்தையே அதிர வைத்திருக்கிறது.

லீமா ரோஸின் சொந்த ஊர் திருவாடானை என்பதால், “சொந்த மண்ணில் களம் காண வேண்டும்” என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.

அதிமுக கூட்டணியில் இருக்கும் இந்திய ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக திருவாடானை தொகுதியில் தான் போட்டியிட ஒதுக்க வேண்டும் என்று எடப்பாடியிடம் அவர் கோரிக்கை வைத்திருக்கிறார். மேலும் அவரது கரன்சி பலத்தால் திருவாடானை மட்டுமல்ல ராமநாதபுரம் மாவடத்துக்கே செலவு செய்யவும் தயாராக இருப்பதாக அவர் எடப்பாடியிடம் தெரிவித்தாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.

அதிமுக மாவட்டச் செயலாளர் முனியசாமி கடந்த இரண்டு முறை முதுகுளத்தூர் தொகுதியில் தோல்வியைத் தழுவியதால், இந்த முறை ‘வெற்றி ஒன்றே இலக்கு’ எனத் திருவாடானை தொகுதியை குறிவைத்து வேலைகளை ஏற்கனவே தொடங்கிவிட்டார். அதேபோல முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்சின் இளையமகன் ஜெயப்ரதீப்பும் தான் எந்த கூட்டணியில் இருந்தாலும் அந்த அணி சார்பில் திருவாடானையில் நிற்க முயற்சித்து வருகிறார்.

எதிர்க்கட்சியில் இப்படி என்றால், ஆளுங்கட்சியில் போட்டி மிகவும் பலமாகவே இருக்கிறது.

திருவண்ணாமலை இளைஞரணி மாநாட்டில் இளைஞரணிச் செயலாளரும் துணை முதல்வருமான் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “இந்த முறை சட்டமன்றத் தேர்தலில் இளைஞரணியினருக்கும், இளைஞர்களுக்கும் அதிக வாய்ப்பு வழங்க வேண்டும் என்று பகிரங்கமாவே வேண்டுகோள் வைத்திருந்தார்.

அந்த வகையில் திமுக இளைஞரணி மாநில நிர்வாகியான இன்பா ரகுவுக்கு திருவாடானையை உதயநிதி வலியுறுத்தி வருவதாக கூறுகிறார்கள் திமுகவில் அதுமட்டுமல்ல… அமைச்சர் ராஜகண்ணப்பன் தனக்கு ஒருவேளை சிட்டிங் முதுகுளத்தூரில் சீட் இல்லையென்றால், தனக்கோ அல்லது தனது மகன் திலீப்புக்கோ வசதியான தொகுதியாக திருவாடானையைதான் பார்க்கிறார்.

காதர் பாட்சா முத்துராமலிங்கம்: திமுக மாவட்டச் செயலாளரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான காதர் பாட்சா முத்துராமலிங்கமும் ஒருவேளை இராமநாதபுரம் தொகுதி கூட்டணிக் கட்சிகளுக்குப் போனால், திருவாடானையில் போட்டியிடத் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடித்தால் இப்போதைய சிட்டிங் தொகுதியான திருவாடானையை கருமாணிக்கம் விட்டுத்தரமாட்டார்.

லீமா ரோசின் மருமகன் ஆதவ் அர்ஜுனா நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் தேர்தல் மேலாண்மைப் பொதுச் செயலாளர் பதவியில் இருக்கிறார். ஏற்கனவே அதிமுக-தவெக கூட்டணிக்கு வாய்ப்புகள் இருப்பதாக பேசப்பட்டு வரும் நிலையில்… ஆதவ்வின் தூதராகவே லீமா ரோஸ் எடப்பாடியை சந்தித்திருக்கலாம் என்றும் அதிமுக வட்டாரங்களில் கூறுகிறார்கள்.

லீமா ரோஸின் இந்த வருகை, அதிமுக மற்றும் தவெக ஆகிய கட்சிகளுக்கிடையே எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மறைமுக அல்லது நேரடித் தேர்தல் புரிதல்களுக்கான ஒரு தொடக்கமாக இருக்கலாம் லீமா ரோஸின் மகன் சார்லஸ் மார்ட்டின் அண்மையில் புதுச்சேரியில் “லட்சிய ஜனநாயக கட்சி” என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். இப்போது லீமா ரோஸ் எடப்பாடி சந்திப்பு மூலமாக மார்ட்டின் குடும்பத்தின் அரசியல் நகர்வுகள் இனி அதிமுகவைச் சார்ந்து இருக்கும் என்பது உறுதியாகியுள்ளது.

2021 இல் மார்ட்டின் நிதி பலம் முழுமையாக திமுகவுக்கு உதவியது. இதற்கு கருவியாக இருந்தவர்களில் ஆதவ் அர்ஜுனாவும் ஒருவர். இப்போது மார்ட்டின் மனைவியான லீமா ரோஸ் எடப்பாடியை சந்தித்ததன் மூலம் அவருக்கான தொகுதி பற்றி மட்டுமல்ல… அதிமுக-தவெக கூட்டணி பற்றிய முக்கிய விவரங்களையும் பேசியிருக்கிறார். விரைவில் இதற்கான விளைவு தெரியும்” என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

Ara