• Thu. Sep 11th, 2025
WhatsAppImage2025-08-28at1013221
WhatsAppImage2025-08-28at101324
WhatsAppImage2025-08-28at1013171
WhatsAppImage2025-08-28at101323
WhatsAppImage2025-08-28at101320
WhatsAppImage2025-08-28at101321
WhatsAppImage2025-08-28at101322
WhatsAppImage2025-08-28at101317
WhatsAppImage2025-08-28at1013191
previous arrow
next arrow
Read Now

பள்ளி மாணவர்களின் பொருட்களில் தலைவர்கள் படங்கள் கூடாது – உயர்நீதிமன்றம்

By

Sep 7, 2021

பள்ளி மாணவர்களின் புத்தக பைகள் உள்ளிட்ட பொருட்களில் அரசியல் கட்சித் தலைவர்கள் படங்களை அச்சிட்டு, அரசு நிதியை தவறாக பயன்படுத்தக் கூடாது எனவும், இந்த நடைமுறை இனிமேலும் தொடராமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து, தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் இருப்பில் உள்ள, முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி படங்கள் அச்சிடப்பட்ட நோட்டு புத்தகங்கள், புத்தக பைகளை கைவிடும்படி வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறி, நமது திராவிட இயக்கம் என்ற அமைப்பின் தலைவர் ஓவியம் ராஜன் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார்.
அந்த மனுவில், தற்போது இருப்பில் உள்ள நோட்டுப் புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்களில் உள்ள முன்னாள் முதல்வர்களின் புகைப்படங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டி மறைத்து வழங்கலாம் எனவும், அதை விடுத்து, இருப்பில் உள்ள நோட்டுகள்,பைகளை வினியோகிக்காமல் தவிர்ப்பதன் மூலம் பொது மக்கள் வரிப் பணத்தை வீணடிக்கப்படுவதாகவும், மாறாக அவற்றை மாணவ, மாணவிகளுக்கு வினியோகிக்க உத்தரவிட வேண்டும் எனவும், எதிர்காலத்தில் நோட்டுகள், பைகளில் அரசியல் கட்சி தலைவர்களை படங்களை அச்சிட தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், முன்னாள் முதல்வர் புகைப்படங்கள் அச்சிடப்பட்ட 64 லட்சம் புத்தக பைகள், 10 லட்சம் எழுதுபொருட்கள் வீணாக்கப்பட மாட்டாது எனவும், அவை மாணவர்களுக்கு வினியோகிக்கப்படும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், பள்ளி புத்தக பைகளில் படத்தை அச்சிடுவதை முதலமைச்சர் விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இதை பதிவு செய்த நீதிபதிகள், பள்ளி மாணவர்களுக்கு வாக்குரிமை இல்லாததால் புத்தக பைகள், புத்தகங்களில் அரசியல் கட்சித் தலைவர்களை அச்சிட்டு, அரசு நிதியை தவறாக பயன்படுத்தக் கூடாது எனவும், இந்த நடைமுறை இனிமேலும் தொடராமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர்.

அரசு நிதி விளம்பரத்திற்கு பயன்படுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், பள்ளி புத்தக பைகளில் அரசியல் தலைவர்களின் படங்களை அச்சிடக் கூடாது என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.