• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

குறுந்தொகைப் பாடல் 25

Byவிஷா

Feb 14, 2025

யாரும் இல்லைத் தானே கள்வன்
தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ
தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே.
பாடியவர்: கபிலர்.
திணை: குறிஞ்சி

பாடலின் பின்னணி: ஒருநாள், தலைவனும் தலைவியும் சந்தித்தார்கள். அப்பொழுது, தலைவன் “நான் உன்னைக் கைவிட மட்டேன். விரைவில் உன்னைத் திருமணம் செய்துகொள்வேன்” என்று அவளுக்கு உறுதிமொழி கூறினான். அவன் கூறிய உறுதிமொழியை நம்பிய தலைவி அவனோடு கூடி மகிழச் சம்மதித்தாள். அதற்குப் பிறகு, அவனைக் காணவில்லை. அவனோடு கூடியிருந்தபொழுது அவன் உறுதிமொழி அளித்ததற்கு யாரும் சான்று இல்லையே என்று தன் தோழியிடம் கூறித் தலைவி வருந்துகிறாள்.
பாடலின் பொருள்: தலைவன் என்னோடு கூடியிருந்த பொழுது அதற்குச் சான்றாக வேறு ஒருவரும் அங்கு இல்லை. தலைவனாகிய கள்வன் மட்டுமே அங்கு இருந்தான். என் தலைவன் கூறிய உறுதி மொழிகள் பொய்யானால் நான் என்ன செய்வேன்? ஓடும் நீரில் வரும் ஆரல் மீனை உண்ணுவதற்காகப் பார்த்து நிற்கும், தினையின் அடியைப் போன்ற, சிறிய செழுமையான கால்களை உடைய, குருகு மட்டுமே அங்கே இருந்தது.