

அகவன் மகளே அகவன் மகளே
மனவுக்கோப் பன்ன நன்னெடுங் கூந்தல்
அகவன் மகளே பாடுக பாட்டே
இன்னும் பாடுக பாட்டேஅவர்
நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே
பாடியவர்: ஒளவையார்.
திணை: குறிஞ்சி

பாடலின் பின்னணி:
தன் மகள் உடல் மெலிந்து வருத்தத்தோடு காணப்பட்டால், மகளின் நிலைக்குக் காரணம் என்ன என்றும் அவள் நலமாவதற்கு என்ன செய்ய வேண்டும் என்றும் தாய் சிந்திப்பது இயற்கை. சங்க காலத்தில், ஒருபெண் களவொழுக்கத்தில் ஈடுபட்டிருக்கும் பொழுது, தலைவனைச் சிலநாட்களாகக் காணமுடியாத சூழ்நிலை ஏற்படுமானால், அவனையே நினைத்து வருந்தி, உடல் மெலிந்து காணப்பட்டால், அவள் தாய், குறி சொல்லும் பெண்மணியை அழைத்துத் தன் பெண்ணின் நிலைமைக்குக் காரணம் என்னவென்று தெரிந்து கொள்ள முயற்சி செய்வது வழக்கம். குறிசொல்லும் பெண்மணி முறத்தில் நெல், அரிசி முதலியவற்றை இட்டும், சோழிகளின் எண்ணிக்கையை கணக்கிட்டும் குறி கூறுவாள். இவ்வாறு குறி கூறுதலை “கட்டுக் காணுதல்” என்றும் குறி சொல்லும் பெண்களை “கட்டுவிச்சி” என்றும் சங்க காலத்தில் அழைத்தனர். பிற்காலத்தில் கட்டுவிச்சி குறத்தி என்றும் அழைக்கப்பட்டாள். கட்டுவிச்சி குறி சொல்ல ஆரம்பிக்கும் பொழுது தமிழ்க் கடவுளாகிய முருகனையும், முருகன் வாழ்வதாகக் கருதப்படும் மலைகளைப் பற்றியும் பாடுவது வழக்கம். இந்தக் கருத்தின் அடிப்படையில் ஒளவையார் இப்பாடலை இயற்றியுள்ளார்.
தன் பெற்றோர்களிடம் வந்து முறையாகத் தன்னை மணந்துகொள்வதற்கான ஏற்பாடுகளைத் தலைவன் செய்வான் என்று எதிர்பார்த்துத் தலைவி காத்திருந்தாள். ஆனால், அவனைக் காணவில்லை. தன் காதலனைச் சில நாட்களாகக் காணாததால் தலைவி உண்ணாமல் உறங்காமல் இருந்து வருந்தி உடல் மெலிந்து காணப்பட்டாள். தலைவியின் நிலையைக் கண்ட தாய், தன் மகளுக்கு ஏதோ நோய் வந்துவிட்டது என்று எண்ணுகிறாள். தன் மகளின் நிலையைப் பற்றிச் செவிலித்தாயோடு கலந்து ஆலோசிக்கிறாள். கட்டுவிச்சியை அழைத்துக் குறி சொல்லச் சொன்னால் தலைவியின் நிலைக்குக் காரணம் என்ன என்பது தெரியும் என்று இருவரும் முடிவு செய்கிறார்கள்.
ஒருநாள் கட்டுவிச்சி வந்தாள். அவள் குறிசொல்வதற்குமுன், முருகனையும் அவன் வாழ்கின்ற மலைகளையும் பற்றிப் பாடுகிறாள். தலைவியின் காதலன் வாழும் ஊரில் உள்ள மலையைப் பற்றி கட்டுவிச்சி பாடியவுடன், தலைவி புன்முறுவல் பூக்கிறாள். கட்டுவிச்சி மீண்டும் அந்த மலையைப் பற்றிப் பாடினால், தலைவியின் மகிழ்ச்சியைக் கண்டு, தலைவியின் செவிலித்தாயும் தாயும் அந்த மலையில் வாழும் தலைவனுக்கும் தலைவிக்கும் உள்ள தொடர்பைப் பற்றிப் புரிந்து கொள்வார்கள் என்று தோழி எண்ணுகிறாள். ஆகவே, அந்த மலையைப் பற்றி மீண்டும் மீண்டும் பாடும்படித் தோழி கட்டுவிச்சியிடம் கூறுகிறாள்.
பாடலின் பொருள்:
பாடும் பெண்மணியே! பாடும் பெண்மணியே! சங்கு மணியினால் ஆகிய மாலைபோல் உள்ள வெண்மையான நல்ல நீண்ட கூந்தலை உடைய, பெண்மணியே! பாட்டுக்களைப் பாடுவாயாக. நீ பாடிய பாட்டுக்களுள் அவருடைய நல்ல நெடிய குன்றத்தைப் பற்றிப் பாடிய பாட்டை, மீண்டும் பாடுவாயாக.

