• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு – கார் டிரைவரின் அண்ணன் உள்பட 2 பேர் கைது…

Byமதி

Oct 26, 2021

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜெயலலிதா கார் டிரைவரின் அண்ணன் உள்பட 2 பேரை தனிப்படை போலீசார் திடீரென்று கைது செய்து அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

கோடநாடு வழக்கில், விபத்தில் கனகராஜ் இறந்தது, கோடநாடு எஸ்டேட் கணினி ஆபரேட்டர் தினேஷ்குமார் தற்கொலை செய்தது ஒன்றுக்கு ஒன்று தொடர்பு உடையதா அல்லது திட்டமிட்டு நடந்த சதியா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை 35-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.

இந்த 2 வழக்குகள் குறித்து போலீசார் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் சிலரிடம் நேரடியாக விசாரணை நடத்தினார். முக்கிய தகவல்கள் பெறப்பட்டு சாட்சிகள், ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருகிறது. ஏற்கனவே கனகராஜ் உறவினர்கள், நண்பர்களிடம் இது தொடர்பாக விசாரணையும் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் வழக்கு தொடர்பான தடயங்களை அழித்ததாக சேலம் எடப்பாடியை சேர்ந்த கனகராஜ் சகோதரர் தனபால், அவருடைய நெருங்கிய உறவினரான சேலம் ஆத்தூரை சேர்ந்த ரமேஷ் ஆகிய 2 பேரை தனிப்படை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.

முன்னதாக சேலம் ஆத்தூரில் இருந்து விசாரணைக்காக அவர்கள் 2 பேரையும் தனிப்படை போலீசார் நீலகிரி மாவட்டம் சோலூர் மட்டம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு அவர்களிடம் போலீஸ் உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினார்கள். விசாரணை முடிவில் தனபால், ரமேஷ் ஆகியோரை கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கைதான 2 பேரையும் ஊட்டியில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சய் பாபா, 2 பேரையும் வருகிற 8-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து 2 பேரும் கூடலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கு தொடர்பாக போலீசார் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில், கோடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடப்பதற்கு முன்பே, இது தொடர்பான தகவல் தற்போது கைதான தனபால், ரமேஷ் ஆகியோருக்கு தெரிந்து உள்ளது. ஆனால் அவர்கள் போலீஸ் விசாரணையில் அதை தெரிவிக்காமல் மறைத்து உள்ளனர்.

மேலும் தனபால், ரமேஷ் ஆகிய 2 பேர் மீதும் சாட்சிகளை மறைத்தல், சாட்சிகளை அழித்தல், சாட்சி சொல்லவிடாமல் தடுத்தல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது என அதில் கூறப்பட்டு உள்ளது.