
கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ள பொதுமக்களுக்கு பா.ஜ.க சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி கோவையில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு, நிவாரண பொருட்களை கொடியசைத்து லாரியில் அனுப்பி வைத்தார். இதன்பின்னர் பேட்டி அளித்த அவர்,
தி.மு.க. அரசை பா.ஜ.க மட்டுமல்ல, அ.தி.மு.க.வும் விமர்சனம் செய்து வருகிறது. முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் கூட தி.மு.க. அரசை கண்டித்து அறிக்கை கொடுத்து இருந்தார். யார் எதிர்க்கட்சி என்று அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க இடையே போட்டி இல்லை. நாங்கள் ஒன்றாக இருக்கிறோம்.
மேலும் இவர் பேசுகையில், சில இடங்களில் நாங்கள் சொல்வதை முதல்வர் கேட்டுக்கொள்கின்றார். கோவில்கள் திறப்பது, ஆவின் டெண்டர் உள்ளிட்டவற்றில் எங்களது கருத்துகளை முதல்வர் ஏற்றுக்கொண்டு உள்ளார். தமிழகத்தில் தி.மு.க. பேசுவது எல்லாம் பா.ஜ.கவை எதிர்த்துதான். தி.மு.க. மற்றும் பா.ஜ.க இடையேதான் கருத்தியல் ரீதியான அரசியல் நடக்கிறது.
மின் வாரியத்தில் ஊழல் நடக்க போகின்றது. அதை தான் சுட்டிக்காட்டினோம். கொடுத்த ஆதாரங்களுக்கு இதுவரை பதில் இல்லை. அமைச்சர் செந்தில் பாலாஜி வாயில் இருந்தே உண்மை வெளிவரும். ஆதாரம் கொடுக்காமல் யாரும் பேசவில்லை. மின்துறை மீது முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கிறோம் என அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியின் போது, ஜி.கே.நாகராஜ், அரசு தொடர்பு பிரிவு செயலாளர் கணபதி என்.ஜான்சன் உள்பட பல்வேறு நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
