முல்லைப்பெரியாறு அணை பராமரிப்பு தொடர்பாக தமிழ்நாடு அளித்துவரும் அழுத்தங்களுக்கு மத்தியில், புதிய அணைக்கான கோரிக்கையை வலுவாக முன்வைக்க கேரளா தயாராகி வருகிறது.

மேற்பார்வைக் குழு மற்றும் முல்லைப்பெரியாறு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் புதிய அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை (DPR) முன்வைத்து விவாதிக்க கேரளா திட்டமிட்டுள்ளது. எந்த மேடையிலும் விவாதிக்கத்தக்க வகையில் இத்திட்ட அறிக்கையை நீர்வளத்துறை உருவாக்கியுள்ளது. “தமிழ்நாட்டிற்கு நீர், கேரளாவிற்கு புதிய அணை” என்ற நிலைப்பாட்டில் கேரளா உறுதியாக உள்ளது என நீர்வளத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் கடந்த சில நாட்களுக்கு முன்பு இதை வலியுறுத்தினார்.
முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பானது என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ள தமிழ்நாடு, பராமரிப்பு பணிகளுக்காகவும், பேபி அணியை வலுப்படுத்த மரங்களை வெட்ட அனுமதி கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளது. இந்த விவகாரம் குறித்து இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பராமரிப்புப் பணிகள் குறித்து மேற்பார்வைக் குழு முடிவெடுக்க வேண்டும் என்ற உத்தரவின் அடிப்படையில், மேற்பார்வை குழுவின் பேச்சுவார்த்தைகளில் புதிய அணையின் அவசியத்தை உணர்த்த கேரளா முயற்சிக்கும் என்றும் கேரள அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அணையின் வரைவு DPR கடந்த ஆண்டே தயாரிக்கப்பட்டது. தேவையான திருத்தங்கள் மற்றும் ஆய்வுகளுக்குப் பிறகு அறிக்கை இறுதி செய்யப்பட்டது. புதிய அணைக்கு தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.