• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கவிதை: பேரழகனே!

பேரழகனே..,

என் கவி நாயகனே !!
எப்போதும் இறுக்கமாக
இராதே …

வாழ்க்கை சுவாரஸ்யம்
நிறைந்தது …
ரசித்துப் பழகு
நீயும் ரசிக்கப்படுவாய்..!

பறந்து செல்லும்
பட்டாம் பூச்சியை
பட்டென்று பிடித்து அதன்
இறக்கையின் வண்ணத்தை
உன் நெற்றியில் பொட்டாக்கி
காசு கிடைக்குமென்று
கனவு நீ கண்டதுண்டா ?
நான் கண்டிருக்கிறேன்..!

சில நொடிகளில் கட்டிடும்
சிலந்தியின் வீட்டை
இமைக்காமல் பார்த்து கொண்டே
இருந்திருக்கிறாயா?
நான் இருந்திருக்கிறேன்…!

குழந்தைகள் தூங்குகின்ற
குட்டி தூளியிலே
உன்னை நீ சுருக்கிக் கொண்டு
உறங்க நீ முயன்றதுண்டா?
நான் முயன்றிருக்கிறேன்…!

வரிசையாக செல்லும்
எறும்பின் பின்னால் சென்று
அதன் இருப்பிடம் தேடி
நீ அலைந்தது உண்டா?
நான் அலைந்திருகிறேன்…!

கதவிடுக்கில் மாட்டிக்கொண்ட
பல்லியின் வால்
துடிதுடித்து கொண்டிருப்பதை
பார்த்து நீ வருந்தியதுண்டா ?
நான் வருந்தியிருக்கிறேன்..!

அடுத்த வீட்டுக் குழந்தையை
ஆசையாய் தூக்கிவைத்து
தூங்க வைக்கும் முயற்சியில்
தாலாட்டு என்ற பெயரில்
உறக்கவே பாட்டுபாடி ,
குரல் கேட்ட குழந்தையை
கதறி அழ வைத்து
அவமானப்பட்டதுண்டா?
நான் பட்டிருக்கிறேன்..

மார்கழி மாதத்து
குளிர் காலையிலே
புல்லின் நுனியில்
படர்ந்திருக்கும் பனித் துளியில்
உன் முகம் பார்த்திட
முயன்றதுண்டா ?
நான் முயன்றிருக்கிறேன்..!

குழந்தைகள் விளையாடும்
கூட்டத்தில் உட்புகுந்து
குழந்தையோடு குழந்தையாக
உன்னை நீ உருமாற்றி
அவர்களோடு செல்லச்சண்டை
நீ போட்டதுண்டா ??
நான் போட்டிருக்கிறேன்..

இத்தனையும் ரசிக்காது
விட்டுவிட்டாய்..
இவற்றையெல்லாம்
ரசித்த
என்னை மட்டுமாவது
கொஞ்சம்
ரசித்துவிட்டு போயேன்…!

கவிஞர் மேகலைமணியன்