கரூரில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்;மன் திருக்கோவிலில் வைகாசி திருவிழா நடைபெறுவதால் இன்று உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் பொது மற்றும் அரசு விடுமுறைகளை தவிர்த்து பண்டிகைகள் திருவிழாக்களுக்கு உள்ளூர் விடுமுறைகள் விடப்படுவதுண்டு. இதற்கான உத்தரவை மாவட்ட கலெக்டர் பிறப்பிக்கிறார். அதன்படி முக்கிய விழாக்கள் மற்றும் குறிப்பிட்ட ஊர்களில் நடத்தப்படும் திருவிழாக்களின் போது அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் மே 29ம் தேதி கரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வைகாசி திருவிழா மே 12ம் தேதி கம்பம் நடும் விழாவுடன் தொடங்கி தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. பூச்சொரிதல் விழா, அக்னி சட்டி, மாவிளக்கு, அலகு குத்துதல், பால்குடம், தீர்த்த குடம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் தினமும் நடைபெற்று வருகிறது.
மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு கரூர் நகர போலீசார் பாதுகாப்பு பணியிலும், மாநகராட்சி ஊழியர்கள் துப்புரவு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். வைகாசி திருவிழாவின் முக்கிய விழாவான கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி மே 29ம் தேதி புதன்கிழமை நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர்.
பிரசித்தி பெற்ற கரூர் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு அம்மாவட்டத்திற்கு மே 29ம் தேதி விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் தங்கவேல் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் 29ம் தேதிக்கு பதிலாக ஜூன் 8ம் தேதி சனிக்கிழமை பணிநாளாக செயல்படும் என அறிவித்துள்ளார்.
கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா : உள்ளூர் விடுமுறை
