• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

கலவர பூமியாகும் கர்நாடகா… பள்ளி கல்லுரிகளை மூட உத்தரவு

கர்நாடகாவில் ஹிஜாப் அணிய கூடாது என்ற பிரச்சனை கலவரமாக மாறியுள்ள நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளை மூடுவதற்கு அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார்.

கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள குண்டாபூர் நகரில் செயல்படும் அரசு பள்ளி ஒன்று மாணவிகள் பர்தா அணிந்து பள்ளிக்கு வரக்கூடாது என உத்தரவு பிறப்பித்தது. எனினும், மாணவிகள் ஹிஜாப் அணிந்தே பள்ளிக்கு வந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. இந்த விவகாரம் கர்நாடகாவில் பெரும் புயலை கிளப்ப மேலும் சில பள்ளிகள் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதித்தது. இதையடுத்து இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு போட்டியாக இந்து மாணவ, மாணவிகளில் ஒரு சிலர் காவித் துண்டு அணிந்து கல்லூரிகளுக்கு வரத் தொடங்கினர். இப்பிரச்சனை நாளுக்கு நாள் தீவிரமடைய போராட்டமாக உருவெடுத்தது.

ஹிஜாப் அணிந்து ஒரு பிரிவினரும், காவி துண்டு அணிந்து மற்றொரு பிரிவினரும் என இரு பிரிவிகளாக மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். இதனிடையே பள்ளிகளில் இஸ்லாமிய மாணவர்கள் ஹிஜாப் தடைக்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்ற வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில் உடுப்பியில் உள்ள மகாத்மா காந்தி நினைவு கல்லூரியில் மாணவர்கள் இரு பிரிவுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஹிஜாப் அணிந்து இஸ்லாமிய மாணவிகள் ஒரு பிரிவாகவும், காவி துண்டு அணிந்து மாணவர்கள் சிலர் மறுபுறமாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஷிமோகாவில் உள்ள கல்லூரியில் தேசியக் கொடி கம்பத்தில் காவி கொடியை மாணவர்கள் பறக்கவிட்டனர். நேற்றைய தினம் காவி துண்டு அணிந்து வந்த மாணவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நீல நிற துண்டு அணிந்து அம்பேத்கர் முழக்கமிட்டு சில மாணவர்கள் கல்லூரிக்குள் நுழைந்தனர்.

மேலும் இன்று காலை கல்லூரிக்கு பர்தா அணிந்து வந்த மாணவியை காவி துண்டு அணிந்து வந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் சுற்றி வளைத்தனர். மேலும் நிலைமை கைமீறி போக போலீசார் தடியடி நடத்தி அவர்களை அப்புறப்படுத்தினர். மேலும் பிரச்னை தீவிரமடைந்த நிலையில் மூன்று நாட்கள் கழித்து இந்த பிரச்னை குறித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பள்ளி கல்லூரிகளை மூன்று நாட்கள் மூட உத்தரவிட்டுள்ளார்.