• Thu. May 2nd, 2024

கர்நாடக பா.ஜ.க எம்.எல்.ஏ மகன் வீட்டில் கோடிக்கணக்கில் சிக்கிய பணம்..
லோக் ஆயுக்தா அதிரடி..!

Byவிஷா

Mar 3, 2023

கர்நாடக பாஜக எம்எல்ஏ விருப்பாக்சா மகன் பிரசாந்த் குமார் லஞ்சம் பெற்றபோது லோக்ஆயுக்தா அதிகாரிகளால் கைது செய்யப்பட்டநிலையில், அவரது வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டின் போது ரூ.6 கோடி ரொக்கப்பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடக்கிறது. இதில் தேவங்கெரே மாவட்டத்தில் சன்னகிரி தொகுதி எம்எல்ஏ விருப்பாக்சப்பா. கர்நாடக அரசின் சோப் மற்றும் டிடர்ஜென்ட் தயாரிக்கும் மைசூர் சாண்டல் சோப் நிறுவனத்தின் தலைவராக விருப்பாக்சப்பா உள்ளார். கர்நாடக எம்எல்ஏ விருப்பாக்சப்பா மகன் பிரசாந்த்குமார். இவர் கடந்த 2008ம் ஆண்டு கர்நாடக அரசுப்பணித் தேர்வில் தேர்ச்சி பெற்று, தற்போது, பெங்களூரு குடிநீர் வழங்கல் மற்றும் சுத்திகரிப்பு பிரிவில் தலைமை கணக்கு அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், மைசூர் சாண்டல் சோப் நிறுவனத்துக்கு கச்சாப் பொருட்களை சப்ளை செய்யும் ஒப்பந்தம் வழங்க கான்ட்ராக்டரிடம் ரூ.81 லட்சம் லஞ்சமாக பிரசாந்த் குமார் கேட்டிருந்தார். இதையடுத்து, அந்த ஒப்பந்ததாரர் லோக்ஆயுக்தா அதிகாரிகளிடம் கடந்த வாரம் புகார் செய்தார். இதையடுத்து, பிரசாந்த் குமாரை பொறிவைத்துப் பிடிக்க லோக்ஆயுக்தா அதிகாரிகள் முடிவு செய்தனர்.


இந்நிலையில் நேற்று மைசூர் சாண்டல் சோப் நிறுவனத்துக்கு ஒப்பந்ததாரர் பணத்தைக் கொண்டு சென்று பிராசந்த் குமாரிடம் வழங்கியபோது, லோக்அயுக்தா அதிகாரிகளிடம் சிக்கினார். அந்த அலுவலகத்தில் இருந்து 3 பைகளில் ரூ.40 லட்சத்தை லோக்ஆயுக்தா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, லோக்ஆயுத்தா அதிகாரிகள் பாஜக எம்எல்ஏ விருப்பாக்சப்பா மகன் பிரசாந்த் மண்டல்வீட்டில் நேற்று அதிரடியாக சோதனையிட்டனர், இந்த சோதனை இரவு வரை நீடித்தது.
லோக்ஆயுக்தா அதிகாரிகள் நடத்திய இந்த சோதனையில் பிரசாந்த் குமார் மண்டல் வீட்டில் இருந்து ரூ.6 கோடி ரொக்கப் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

லோக்ஆயுக்தா அதிகாரிகள் கூறுகையில் “ கேஎஸ்டிஎல் அலுவலகத்தில் எம்எல்ஏ விருப்பாக்சப்பா மகன் ரூ.40 லட்சம் பெற்றபோது கைது செய்யப்பட்டார். அவரின் அலுவலகத்தில் இருந்து 3 பைகளில் ரூ.1.75 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதன்பின் பிரசாந்த் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டில் ரூ.6 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது” எனத் தெரிவித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *