• Sun. Apr 12th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தயாராகும் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள்

காற்றுடன் கனமழை காரணமாக கடந்த 20 நாட்களுக்கு மேலாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் இருந்த கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் மீன்வளத்துறை அனுமதி அளித்த நிலையில் மீண்டும் கடலுக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. 20 நாட்களுக்கு முன் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கனமழை கொட்டி தீர்த்ததோடு குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்து வந்தது. காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் மற்றும் மீன்வளத்துறை அறிவுறுத்தினர்.

இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், தேங்காய்பட்டணம், முட்டம் மீன்பிடி துறைமுகங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 4000-க்கும் மேற்பட் பைபர் படகு மீனவர்களும் மீன்பிடிக்க செல்லாமல் இருந்து வந்தனர். கடந்த 6 நாட்களுக்கு முன் வங்க கடலில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சியால் மீண்டும் கடலில் காற்றுடன் கனமழை பெய்ததால் மீனவர்கள் தொடர்ந்து 20-நாட்களுக்கு மேலாக மீன்பிடிக்க செல்லாமல் இருந்த நிலையில், தற்போது கடலில் காற்று மற்றும் கனமழையின் தாக்கம் குறைந்தது. ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு செல்லும் விசைப்படகுகளுக்கு மீன்வளத்துறை சார்பில் இன்று முதல் அனுமதி டோக்கன் வழங்கப்பட உள்ள நிலையில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தயாராகி வருகின்றனர்.