திமுக உறுப்பினர் சேர்க்கை விவகாரத்தில் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கும், மகளிரணிச் செயலாளர் கனிமொழிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இன்றைக்கு (டிசம்பர் 26) அது கனிமொழியிடம் இருந்து அறிக்கையாக வெடித்துள்ளது.
கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி நடந்த மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பேசிய திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், திமுக ஆளுங்கட்சியாக இருக்கிறது என்பதற்காக மெத்தனமாக இருந்துவிடக் கூடாது. திமுகவின் உறுப்பினர் சேர்க்கையை தீவிரமாக நடத்த வேண்டும். 100 பேர்களில் 30 பேர் திமுக உறுப்பினராக இருத்தல் வேண்டும் என்று ஆணையிட்டார்.
இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் தொடங்கியிருக்கின்றன. இந்த வகையில் கோவை மாவட்ட திமுகவின் பொறுப்பாளரான அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று டிசம்பர் 26 (பிற்பகல்) திமுகவின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதியை சிறப்பு விருந்தினராக அழைத்து உறுப்பினர் சேர்க்கை முகாமினைத் துவக்கி வைக்கிறார். இதற்காக தனது வழக்கமான ஏற்பாடுகளை செந்தில்பாலாஜி செய்திருக்கிறார்.
இந்த நிலையில் திமுக மகளிரணியைச் சேர்ந்த கோவை நிர்வாகிகள் மகளிரணிச் செயலாளர் கனிமொழியை நேற்று தொடர்புகொண்டிருக்கிறார்கள்.
“ஏற்கனவே இளைஞரணியில் இளம்பெண்கள் அணி என்று உருவாக்கப்பட இருப்பதாக ஒரு பேச்சு எழுந்தது. அதன் பின் மகளிரணியின் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டது. இப்போது உதயநிதி கோவைக்கு வந்து உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைக்க இருக்கிறார். அதற்காக திட்டமிட்டே இளம்பெண்களை உறுப்பினர்களாக சேர்த்து வருகிறார்கள்.
18 வயது முதல் 30 வரையிலான பெண்களை இளைஞரணியில் சேர்த்து கட்சியின் உறுப்பினர்களாக காட்டவும் ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. அப்படியென்றால் திமுகவில் இருக்கும் மகளிரணி என்ன 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மட்டுமே இடம்பெறும் அணியா? மகளிரணியின் வளர்ச்சிக்கு இந்தத் திட்டம் தடையாக இருக்கும்” என்று புலம்பியிருக்கிறார்கள். தொடர்ச்சியாக தனக்கு வந்த புகார்களை அடுத்து ஒருகட்டத்தில் பொங்கிய கனிமொழி எம்.பி. இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கும் கொண்டு சென்றிருக்கிறார்.
அத்தோடு நில்லாமல் உதயநிதியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் துவக்குவதற்கு சில மணி நேரம் முன்பாக இன்று (டிசம்பர் 26) காலையிலேயே ஓர் சூடான அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் கனிமொழி.
அதில், “கொள்கை உறுதிகொண்ட இளைஞர்களாலும், எழுச்சிமிக்க பெண்களாலும் கட்டமைக்கப்பட்ட பேரியக்கம் நமது கழகம். நமது கழகத்தின் அடித்தளமாக விளங்கும் இளைஞர்கள் பலரை நம் கொள்கைகள் சென்றடையவும், நமது கழகத்தில் அவர்களை உறுப்பினர்களாக இணைக்கவும் நம் கழகத் தலைவரும் மாண்புமிகு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்கள் 18.12.2021 ஆம் தேதி நடந்த மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அறிவுறுத்தினார்.
தமிழகத்தின் மக்கள் தொகையில் சரிசமமான பங்குடையவர்கள் பெண்கள், அதிலும் நாளைய சமுதாயத்தின் சிந்தனையை வடிவமைக்கும் திறன் பெற்றவர்கள் இன்றிருக்கும் 18-30 வயதுடைய இளம் பெண்கள். நமது கழகத்தின் எதிர்காலத்தை உருவாக்குவதில் இந்த இளம் பெண்களின் பங்கு இன்றியமையாதது.
திராவிட முன்னேற்ற கழகத்தின் மையக் கோட்பாடாக விளங்கும் சமூக நீதி சிந்தனையின் வெளிப்பாடே அரசியலில் பெண்கள் தனக்கென உரிமைகளை உருவாக்குவது. நமது கழக மகளிரணி அடுத்த தலைமுறைக்கான சுயசிந்தனை உடைய, உரிமைகளை உணர்ந்த இளம் பெண்களை உருவாக்க வேண்டும். அந்த விதத்தில் இன்றிருக்கும் 18-30 வயதிற்குள்ளான இளம் பெண்களை நமது கழகத்தில் ‘மகளிரணி உறுப்பினர்களாக’ இணைத்து அவர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது.
அரசியலில் ஆர்வம் காட்ட துடிக்கும் இளம் பெண்களுக்கு வாய்புகள் அளிப்பதைத் தாண்டி, நாம் 18-30 வயதிற்குள் உள்ள இளம் பெண்களை மகளிரணி உறுப்பினர்களாக இணைத்து அவர்களுக்கு அரசியலின் மேல் ஈடுபாடு ஏற்பட வழி செய்து நமது கழகத்தின் எதிர்காலத்திற்கான அடித்தளம் வலுவாக உள்ளதை உறுதி செய்வோம். இந்த முக்கியமான முயற்சியை நீங்கள் அனைவரும் இன்றே துவக்கி, இதில் ஏற்படும் முன்னேற்றங்கள் மற்றும் சம்மந்தமான தகவல்களை அணித் தலைமையுடன் தினந்தோறும் பகிருமாறு கேட்டுக்கொள்கிறேன்”என்று அறிக்கை விட்டிருக்கிறார் கனிமொழி.
பொதுவாகவே கனிமொழி அறிக்கை விடுவது என்பது அபூர்வமாகவே நடக்கும். இந்நிலையில் திட்டமிட்டு மகளிரணியை பலவீனப்படுத்துவதற்காக உதயநிதி ஸ்டாலின் முயற்சிகள் செய்துவருவதாக மகளிரணி நிர்வாகிகளின் புகார்களுக்குப் பிறகே இப்படிப்பட்ட அறிக்கையை இன்று வெளியிட்டிருக்கிறார் கனிமொழி.
18-30 வயதுக்கு உட்பட்ட பெண்களை, மகளிரணி உறுப்பினர்களாக இணைத்து அவர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள கனிமொழி…இது தொடர்பாக தினந்தோறும் தனக்கு ரிப்போர்ட் அளிக்க வேண்டும் என்றும் அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது கவனிக்கத் தக்கது. கனிமொழியின் மொழியில் ஒரு மாற்றம் ஏற்பட்டிருப்பது குறித்தும் திமுகவுக்குள் பரபரப்பாக பேசப்படுகிறது.