• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தேனியில் நகை அடகு கடை உரிமையாளர் தலைமறைவு… அடகு கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்..,

ByM. Dasaprakash

Nov 26, 2023

தேனி மாவட்டம் தேனி நகராட்சிக்குட்பட்ட பொம்மைய கவுண்டன்பட்டி பாலன் நகரில் கோபுரம் கோல்டு லோன் என்ற பெயரில் அதே பகுதியைச் சேர்ந்த தங்கராஜன் என்பவர் நகை அடகு கடை நடத்தி வந்தார்.இவரிடம் இப்பகுதியைச் சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்டோர் நகைகளை அடகு வைத்து கடன் பெற்றுள்ளனர்.

கடந்த சில நாட்களாக கடன் பெற்றவர்கள் பணத்தைச் செலுத்தி நகை திரும்ப கேட்டபோது,பணத்தை திரும்ப செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளுங்கள், நகை லாக்கரில் உள்ளது நாளை எடுத்துத் தருகிறேன் எனக் கூறி பணத்தை மட்டும் வசூலித்துக் கொண்டு நகையை திரும்பத் தராமல் இருந்து வந்துள்ளார்.பல பேர் இதேபோல பணத்தைக் கட்டி திரும்ப கேட்டபோது இதே பதிலை கூறி காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் ஒரு சிலர் இவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அடகுக்கடை திடீரென பூட்டப்பட்டிருந்த நிலையில், தங்கராஜனின் மொபைல் போனும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
இதனால் நகையை திரும்ப வாங்க வந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.கடை பூட்டப்பட்டிருந்த தகவல் அப்பகுதியில் பரவியதால் இவரிடம் அடகு வைத்த அனைவரும் கடை முன்பாக கூட தொடங்கினர்.இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அப்பகுதியில் கூடியிருந்த ஏமாற்றப்பட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, முறையாக காவல் நிலையத்தில் புகார் அளித்தால் நகையை திரும்ப பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

அதன் நேரில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.சுமார் 300க்கும் மேற்பட்டோர் நகையை அடகு வைத்து கடன் பெற்றதாக கூறப்படும் நிலையில், முதல் கட்டமாக சுமார் 15க்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளனர். புகார் அளிப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏமாற்றப்பட்டவர்களிடம் புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் தலைமறைவான தங்கராஜனை தீவிரமாக தேடி வருகின்றனர்.