தமிழக வெற்றி கழக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும் அமைச்சருமான செங்கோட்டையன், அமைச்சர் பதவி ஏற்ற பிறகு இன்று கோவைக்கு வந்தார். கோவை விமான நிலையத்தில் அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி மக்கள் விரும்பிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளதாக கூறினார். இளைஞர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட அனைத்து தரப்பினரும் மாற்றத்தை எதிர்பார்த்ததால், தூய்மையான மற்றும் வியப்பூட்டும் ஆட்சியை வழங்கி வருகிறோம் என்றார்.
மேலும், “இந்தியாவில் முதன்முறையாக பணம் வழங்காமல் தேர்தலை சந்தித்த வரலாற்றை உருவாக்கியவர் முதல்வர் விஜய். மக்கள் நலனுக்கான பல்வேறு திட்டங்கள் தற்போது நடைமுறையில் கொண்டு வரப்பட்டு வருகின்றன. 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்கள் பாதுகாப்பு, குழந்தைகள் போதை பழக்கத்திலிருந்து பாதுகாப்பு, ஆலயங்கள், பள்ளிகள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள மதுக்கடைகள் அகற்றுதல் போன்றவை மக்கள் எண்ணங்களை பிரதிபலிக்கும் திட்டங்களாகும்” என தெரிவித்தார்.
அதிமுக கட்சியின் உட்கட்சிப் பிரிவு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “தலைவர்களையும் மக்களையும் மதிக்காதவர்களுக்கு தான் இவ்வாறான சரிவு ஏற்படும்” என்று கூறினார்.

அத்திக்கடவு–அவினாசி திட்டம் குறித்து பேசும்போது, “அந்த திட்டத்தின் விழாவில் எம்.ஜி. ராமச்சந்திரன் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் படங்கள் தேவையில்லை, என் படம் மட்டும் போதும் என நினைத்தவரின் நிலை இன்று என்ன என்பதை நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதா அவர்களின் படம் இன்றும் என் பாக்கெட்டில் உள்ளது” என்றார்.
மேலும், “என் படம் மட்டும் போதும் என நினைத்தவரின் கனவு இன்று தூள் தூளாகி விட்டது. ஜெயலலிதாவின் ஆத்மா அவருக்கு தண்டனை அளித்து கொண்டிருக்கிறது” என்று கடுமையாக விமர்சித்தார்.




