• Fri. Apr 19th, 2024

ஜெ., மரணம் வழக்கு.. ஆணையத்தில் ஓபிஎஸ் இன்று ஆஜர்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நீதிமன்ற தடையால் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, சசிகலாவின் உறவினர்கள், ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் என 154 பேரிடம் ஆணையம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மேலும் சசிகலா தரப்பு கேட்டுக்கொண்டதன் பேரில் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்ட அப்பல்லோ டாக்டர்களிடம் மறு விசாரணை நடத்தியது. இவர்களிடம் சசிகலா தரப்பு குறுக்கு விசாரணை மேற்கொண்டது

ஏற்கனவே 90 சதவீத விசாரணை முடிவடைந்த நிலையில் தற்போது விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. ஜெயலலிதா சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டது முதல் அவரது இறுதி நாட்கள் வரை அப்பல்லோ மருத்துவமனை அவருடன் இருந்த சசிகலா தனது தரப்பு விளக்கத்தை பிரமாண வாக்குமூலமாக ஏற்கனவே ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளார்.

ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது பெரும்பாலான நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தவர்களில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் ஒருவர். இதன்காரணமாக ஓ.பன்னீர்செல்வத்திடம் விசாரணை நடத்த ஆணையம் ஏற்கனவே முடிவு செய்தது. அதன்படி, இந்த வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதிப்பதற்கு முன்பாக ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆணையம் பலமுறை சம்மன் அனுப்பியது.

ஆனால் பல்வேறு காரணங்களால் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகவில்லை. அவரது தரப்பில் ஆஜராக காலஅவகாசம் கோரப்பட்டது. அதேவேளையில் நிர்வாக காரணங்களுக்காக ஓரிரு முறை ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகும் தேதியை ஆணையம் மாற்றி அமைத்தது. இதன்காரணமாகவும் ஓ.பன்னீர்செல்வம் ஆணையத்தில் ஆஜராகவில்லை.

இந்தநிலையில்தான் ஓ.பன்னீர்செல்வத்திடம் விசாரணையை முடித்து, ஆணையத்தின் விசாரணையை முடிவுக்கு கொண்டுவர ஆணையம் திட்டமிட்டது. இதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் இன்று (மார்ச் 21) ஆஜராக ஆணையம் சம்மன் அனுப்பியது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சம்மனை பெற்றுக்கொண்ட நிலையில் அவர் இன்று காலை 10.30 மணிக்கு ஆணையத்தில் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை வாக்குமூலமாக அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோன்று சசிகலாவுடன் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த அவரது அண்ணன் மனைவி இளவரசியும் ஆஜராக ஆணையம் சம்மன் அனுப்பிய நிலையில் அவரும் இன்று ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *