இன்று காலை முதல் தமிழகம் முழுவதும் உள்ள போத்தீஸ் நிறுவனங்களுக்குச் சொந்தமான 20க்கும் மேற்பட்ட இடங்களில் ஐ.டி.ரெய்டு நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஜவுளிக்கடைகளின் சாம்ராஜ்யமாக சரணவா ஸ்டோரை அடுத்து போத்தீஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இவர்களுக்கு தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை, நாகர்கோவில், புதுச்சேரி, கோவை, ஸ்ரீவில்லிபுத்தூர், சேலம் ஆகிய முக்கிய நகரங்களில் அமைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் கேரள மாநிலம் திருவனந்தபுரம், எர்ணாகுளம் கர்நாடக மாநிலம் பெங்களூருவிலும் அமைந்துள்ளது.
போத்தீஸ் துணிகள் மட்டுமல்லாது நகைக்கடை, வீட்டு உபயோக பொருட்கள், பலசரக்கு பொருட்கள், காய்கறி மற்றும் பழங்கள் ஆகியவைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை முதல் தமிழகம் முழுவதும் போத்தீஸ் நிறுவனங்களுக்கு சொந்தமான 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்
அதாவது போத்தீஸ் நிறுவனத்தின் மீது வரி ஏய்ப்பு புகாரை அடுத்து ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள போத்தீஸ் உரிமையாளர் ரமேஷ் வீடுகளில் மற்றும் சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள போத்தீஸ் ஜவுளி கடையின் உரிமையாளரின் 2 மகன்களான போத்தி ராஜா மற்றும் அசோக் ஆகியோர் வீடுகளில் வரித்துறையினர் இன்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இருவர் வீட்டிலும் 12 வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை 7.20 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் சென்னை ஜிஎன்செட்டி சாலையிலுள்ள போத்தீஸ் ஜவுளி நிறுவனம், குரோம்பேட்டையில் உள்ள போத்தீஸ் ஸ்வர்ண மகால் மற்றும் துணிக்கடை, கோவையில் உள்ள இரண்டு போத்தீஸ் துணி கடைகள், நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள போத்தீஸ் கடை மற்றும் மதுரையில் இயங்கி வரும் போத்தீஸ் கடைகளிலும் இன்று வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
