• Tue. Apr 30th, 2024

நெல்லை காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் ஐ.டி ரெய்டு

Byவிஷா

Apr 17, 2024

காங்கிரஸ் பிரமுகரும், நெல்லை மாவட்ட கல்குவாரி சங்கத் தலைவருமான ரிச்சர்ட் என்பவரது வீட்டில் வருமான வரித்துறையினர் நேற்று முன்தினம் திடீர் சோதனை நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. வாக்களார்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்கும் பொருட்டு, தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாகவே, கடந்த வாரம் சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் வைத்து நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.4 கோடியை பறக்கும் படையினர் கைப்பற்றினர். அதைத்தொடர்ந்து இப்பணத்தைக் கொண்டு சென்ற 3 பேரைக் கைது செய்து மேற்கொண்ட விசாரணையில், அப்பணம் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான புளு டைமண்ட் ஹோட்டலுக்குத் தொடர்புடையது என்றும், அதை தேர்தல் பணப்பட்டுவாடாவுக்காகக் கொண்டு சென்றது பாஜகவினர் என்றும் தகவல்கள் வெளியானது. மேலும், இதுதொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த போலீசார், வரும் 22ஆம் தேதி நயினார் நாகேந்திரன் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இந்த நிலையில் காங்கிரஸ் பிரமுகரும், நெல்லை மாவட்ட கல்குவாரி சங்கத் தலைவருமான ரிச்சர்ட் என்பவரது வீட்டில் வருமான வரித்துறையினர் நேற்று முன்தினம் திடீர் சோதனை நடத்தினர். அதாவது, நேற்று முன்தினம் இரவு கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையில் கனிமவள வளங்களை கேரளாவிற்கு கொண்டு செல்லும் 67 லாரிகளின் நடை சீட்டுகளை வருமான வரித்துறையினர் ஆய்வு செய்ததாகவும், அந்த சீட்டுகளைக் கைப்பற்றியபோது, அது போலி சீட்டு என்றும் கூறப்படுகிறது.
எனவே, அதில் முறைகேடு நடந்துள்ளதா? என ஆய்வு செய்வதற்காகத் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கனிமவள அலுவலகத்திற்கு நேற்று காலை வருமான வரித்துறையினர் வந்தனர். அவர்கள் அந்த சீட்டின் உண்மைத் தன்மை சோதனை செய்யும் பொழுது அதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக கண்டறிந்துள்ளனர். ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடை சீட்டு வழங்குவது வழக்கம்.
நேற்று செவ்வாய்க்கிழமை என்பதால் நடை சீட்டினை வாங்க நிறைய கல்குவாரி அதிபர்களும், லாரி உரிமையாளர்களும் வந்திருந்துள்ளனர். அப்பொழுது திருநெல்வேலி மாவட்ட கனிமவள சங்கத் தலைவர் ரிச்சர்ட் அங்கிருந்ததால் அவர்களிடமிருந்து பணம் கை மாறி இருக்கலாம் அல்லது தேர்தல் பணப்பட்டுவாடாவுக்காகப் பணம் கை மாறி இருக்கலாம் என்ற கோணத்தில் அவரது மகாராஜா நகர் உழவர் சந்தைக்கு அருகே உள்ள அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றிச் சென்றுள்ளதாகவும், கட்டுக்கட்டாகப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், தன்னிடமிருந்து எவ்விதமான பணமும் பறிமுதல் செய்யப்படவில்லை எனவும் செய்தியாளர்களிடம் ரிச்சர்ட் தெரிவித்துள்ளார். தற்போது தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு நாளே இருக்கும் நிலையில், கல்குவாரி அதிபர் வீட்டில் நடைபெற்ற இந்த சோதனை பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *