

பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் விதிமுறைகளை மீறி பேரூராட்சி தலைவர் மிதுன் சக்கரவர்த்தி வைத்த விளம்பர பேனர்கள் அகற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி பேரூராட்சி தலைவராக இருப்பவர் மிதுன் சக்கரவர்த்தி. இவரது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட உள்ளதாக பேரூராட்சி முழுவதும் பெரிய பெரிய பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. சாலையின் இருபுறமும் போக்குவரத்துக்கு இடையூறாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இந்த பேனர்கள் வைக்கப்பட்டதால் புகார் எழுந்தது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், சட்டம் போடுபவர்களை அதைமீறுவதை என்ன சொல்வது? பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் 14.9.2022 அன்று நடைபெற்ற கூட்டத்தில், பிளக்ஸ் பேனர்கள் வைக்க தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அந்த தீர்மானத்தை நிறைவேற்றிய பேரூராட்சி தலைவரே விதிகளை மீறி அவரது பிறந்தநாளை முன்னிட்டு ஏராளமான பிளக்ஸ் பேனர்கள் வைத்து விதிகளை மீறியுள்ளார். ஆனால், தமிழக அரசு இந்த விஷயத்தில் கறாரான நடவடிக்கை எடுத்ததன் காரணமாக நேற்றே அவசர அவசரமாக அனைத்து பிளக்ஸ் பேனர்களும் அகற்றப்பட்டுள்ளன. எதற்கு விதிமுறை மீறி பேனர்கள் வைக்க வேண்டும்? அதை ஏன் இப்படி அவசரமாக அகற்ற வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

