இயக்குநர் விக்னேஷ் சிவன் உடனான நிச்சயதார்த்தத்தை பேட்டியின் மூலமே, நயன்தாராவின் ரசிகர்கள் தெரிந்துகொண்ட நிலையில், அதே போல தனது திருமணத்தையும் முடித்துக் கொண்டாரா? என்று குழம்பி போயுள்ளனர். தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. நானும் ரவுடி தான் படத்தின் ஷூட்டிங்கின் போது நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே மலர்ந்த காதல் 6 வருடங்களை கடந்து சென்று கொண்டிருக்கும் நிலையில், இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என்கிற கேள்வியை ரசிகர்கள் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர். நெற்றிக்கண் படத்தின் புரமோஷனுக்காக விஜய் டிவியில் டிடி நீலகண்டனுக்கு அளித்த பேட்டியில் தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாக நயன்தாரா தெரிவித்து இருந்தார். அதற்கு முன்பாகவே இயக்குநர் விக்னேஷ் சிவன் நயன்தாராவின் விரலில் உள்ள மோதிரத்தை மட்டும் போட்டோ போட்டு ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்திருந்தார். இந்த ஆண்டு முடிவுக்குள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் போயஸ் கார்டனில் ரெடியாகி வரும் வீட்டின் பணிகள் நிறைவடைந்ததும் திருமணம் என பல்வேறு பேச்சுகள் எழுந்து வந்த நிலையில், தற்போது நடிகை நயன்தாராவுக்கு திருமணம் ஆகிவிட்டதா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. காளிகாம்பாள் கோயிலில் வெள்ளிக்கிழமை சாமி தரிசனம் செய்த நடிகை நயன்தாரா, சென்னை மேயர் பிரியா ராஜனை சந்தித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இந்நிலையில், அதில் ஒரு புகைப்படத்தில் நடிகை நயன்தாராவின் நெற்றி வகிடில் குங்குமம் இருந்தது தான் தற்போது நயன்தாராவுக்கு திருமணம் ஆகிவிட்டதா? என்கிற குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், இதுவரை இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் தங்களுக்கு திருமணம் நடந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஒருவேளை நிச்சயம் நடந்ததை ரகசியமாக வைத்து பேட்டியின் போது சொன்னது போல, காத்துவாக்குல ரெண்டு காதல் புரமோஷன் போது இதுதொடர்பான கேள்வி கேட்கப்பட்டால், நயன்தாரா விளக்கம் அளிப்பாரா என்று ரசிகர்கள் காத்து கொண்டிருக்கிறார்கள்.