ஈரானின் ஏவுகணைத் தாக்குதலில் இஸ்ரேலில் மூவர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. ‘ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ் 3’ என்ற பெயரில் ஈரான் இந்தத் தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இஸ்லாமிக் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) வெளியிட்ட அறிக்கையில், இராணுவத் தளங்கள் மற்றும் விமானத் தளங்கள் உட்படப் பல இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலின் இரண்டு எஃப்-35 ரக விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாகவும் ஈரான் இராணுவம் கூறியது. ஆனால், இந்த தகவலை இஸ்ரேல் மறுத்துள்ளது. தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேலில் உள்ள சில விமான நிலையங்கள் மூடப்பட்டன.
மத்திய இஸ்ரேலில் உள்ள ஒரு தெருவில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்திய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. தாக்குதல் நடந்த இடங்கள் குறித்த தகவல்களை இஸ்ரேல் வெளியிடவில்லை. தொடர்ச்சியாக எச்சரிக்கை சைரன்கள் ஒலித்ததால், பொதுமக்கள் நிலத்தடி பதுங்கு குழிகளில் தஞ்சம் புகுந்தனர். விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் கூறுவது தவறானது என்று இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு முன்னதாக, இஸ்ரேல் ஈரானில் நடத்திய தாக்குதலில் 78 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 320 பேர் காயமடைந்தனர். ஈரானில் தாக்குதல்கள் தொடரும் என்று இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் முகமது பாகரி கொல்லப்பட்டார். இதையடுத்து, மேஜர் ஜெனரல் அமீர் ஹடமி புதிய இராணுவத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஈரானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் போன்ற இஸ்ரேலின் முக்கிய நகரங்களில் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பல ஏவுகணைகளை இஸ்ரேலின் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்துத் தகர்த்தது. டெல் அவிவ்வின் பல்வேறு பகுதிகளில் வெடிச்சத்தங்கள் கேட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்தன.
தாக்குதலுக்குப் பதிலடி தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இதேபோல், கடுமையான பதிலடி இருக்கும் என்று ஈரானின் தலைவர் காமெனியும் எச்சரித்துள்ளார். அமெரிக்காவுடனான அணுசக்தி பேச்சுவார்த்தைகள் அர்த்தமற்றவை என்று ஈரான் தலைமை தெரிவித்துள்ளது.