• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இ-சேவை மூலம் எல்எல்ஆர் பெறும் வசதி அறிமுகம்

Byவிஷா

Mar 13, 2024

இன்று முதல் வாகனம் ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம் பெற இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக சாலை பாதுகாப்பு ஆணையர் அ.சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,
தற்போது வாகனங்கள் ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம் பெறுவதற்கு, ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள், இடைத் தரகர்கள், தனியார் இணைய சேவை மையங்களையே நம்பியுள்ளனர்.
இதனால் பொதுமக்களுக்கு தேவையற்ற செலவுகள் அதிகரிக்கின்றன. மக்களின் இந்தக் குறைகளைப் போக்கும் வகையில் எந்தவிதப் புகாருக்கும் இடம் அளிக்காத வகையில் இதை மேம்படுத்தவும், நடைமுறை சிக்கல்களை சரிசெய்யவும், மக்களின் வசிப்பிடங்களுக்கு அருகிலேயே இந்த சேவையை அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி இனி தமிழகம் முழுவதும் உள்ள 55,000க்கும் மேற்பட்ட இ-சேவை மையங்கள் மூலம் பழகுநர் உரிமம் அதாவது எல்எல்ஆர் பெற விண்ணப்பித்துக் கொள்ளலாம். இந்த நடைமுறை இன்று மார்ச் 13 புதன்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.
பொதுமக்கள் இந்த வசதியை இனி இ-சேவை மையங்கள் மூலமாக எல்எல்ஆர் பெற விண்ணப்பிக்கலாம். இதனை பெற பொதுமக்கள் கூடுதலாக இ-சேவை மையத்துக்கான சேவை கட்டணம் ரூ.60 செலுத்த வேண்டும். ஒப்புதல் அளிக்கப்பட்ட பழகுநர் உரிமத்தை வழக்கம்போல பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் வாகனத் துறை மூலம் மக்கள் பெறக்கூடிய மற்ற சேவைகளும் அதாவது ஓட்டுநர் உரிமம், வாகன உரிமம் உட்பட அனைத்து சேவைகளும் இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இத்தகவல் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.