• Mon. May 6th, 2024

ராணுவவீரர்களுக்கு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு

Byவிஷா

Mar 13, 2024

நடப்பு நிதியாண்டில் இருந்து முன்னாள் ராணுவ வீரர்கள் சொத்து வரி மற்றும் வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது..,
தாய்நாட்டிற்காக நம் நாட்டின் பல்வேறு எல்லைகளில் தன்னலமற்ற சேவைகள் செய்துவரும் நமது முன்னாள் படைவீரர்களின் நலனிற்காக இந்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அந்தவகையில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சொத்து வரி, வீட்டு வரி செலுத்துவதில் விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நடப்பு நிதியாண்டில் இருந்து சொத்து, வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த வரி விலக்கு அளிப்பதன் மூலம் 1.20 லட்சம் முன்னாள் ராணுவ வீரர்கள் பயன் பெறுவார்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தை செலுத்தப்படும் தேவையான செலவினத்தை தமிழ்நாடு முன்னாள் ராணுவ வீரர்கள் நல நிதியில் இருந்து மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. மேலும், இத்திட்டத்திற்கான செலவினம் தமிழ்நாடு முன்னாள் ராணுவ வீரர்கள் நல நிதியில் இருந்து மேற்கொள்ளப்படுவதால் இந்த உத்தரவுக்கு நிதித்துறையின் இசைவு பெற தேவையில்லை எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கான நிபந்தனை:
முன்னாள் ராணுவ வீரர்கள் தமிழ்நாட்டில் நிரந்திரமாக குடியிருப்பாளராக இருத்தல் வேண்டும்.
முன்னாள் ராணுவ வீரர்களின் சொந்த வீட்டிற்கு, அவர்களின் சொந்த பயன்பாட்டில் குடியிருப்பாக பயன்படுத்தப்படும் கட்டடத்திற்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப்படும்.
முன்னாள் ராணுவ வீரர்கள் வருமானவரி செலுத்துவராக இருக்க கூடாது.
ராணுவ பணியில் இருந்து ஒபிவு பெற்றபின் மறுவேலைவாய்ப்பு முறையில் தமிழ்நாடு அரசு துறைகள், மத்திய அரசு பணிகள், மத்திய மாநில பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் மற்றும் இந்த மறுவேலைவாய்ப்பு பணியில் இருந்து ஓய்வூதியம் பெறுபவர்களாக இருத்தல் கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *