கோவை கொடிசியா வர்த்தக அரங்கில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வர்த்தக வளர்ச்சிக்காக, “சர்வதேச வாங்குவோர்- விற்போர் சந்திப்பு” நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், மாநில குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு பல்வேறு நிறுவனங்களுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசு செயலாளர் அர்ச்சனாபட்நாயக், தொழில் ஆணையர் இல.நிர்மல்ராஜ், மாவட்ட ஆட்சி தலைவர் கிராந்தி குமார் பாடி, தொழில் வணிக கூடுதல் ஆணையர் சிவ சௌந்திர வள்ளி, கொடிசியா அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருகை புரிந்த தொழில் முனைவோர்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பினர்கள், தொழில்முனைவோர்கள் பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், மாநிலத்தில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சிக்காக தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை பட்டியலிட்டார்.
அவர் பேசுகையில், “சென்னையில் நடைபெற்ற உலக தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் 46 கோடி ரூபாய் அளவிற்கு தொழில் முதலீடுகள் ஏற்கப்பட்டது. அதன் அடுத்த கட்டமாக கோவையில் நடைபெற்றுள்ள இந்த நிகழ்ச்சியில் 115 கோடி ரூபாய் அளவிற்கு தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. இவை மாநிலத்தின் எம் எஸ் எம் இ தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும்.
சுய வேலைவாய்ப்பு திட்டங்களுக்கான மானியம், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்குதல், அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டம் என பல்வேறு திட்டங்களை எம் எஸ் எம் இ துறையின் வளர்ச்சிக்காக அரசு செயல்படுத்தி வருகிறது.
சேலம், கிருஷ்ணகிரி, மதுரை மற்றும் கோவை ஆகிய பகுதிகளில் சுமார் 28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பண்ணடுக்கு தொழில் கூடங்கள் அமைய உள்ளன.
மற்ற மாநிலங்கள் மற்றும் பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் தங்குவதற்காக தங்கும் விடுதிகள் கட்டப்பட்டு வருகிறது. கோவை குறிச்சியில் 22 கோடி மதிப்பீட்டில் 510 பேர் தங்கும் வகையில் விடுதி கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தின் முக்கிய தொழிலாக உள்ள தென்னை நார் சார்ந்த தொழிலுக்காக ஐந்து இடங்களில் கயிறு குழுமங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் 4 கோடி மதிப்பீட்டில் கயிறு உற்பத்திகளின் தரத்தை ஆய்வு செய்வதற்கான ஆய்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
எம்.எஸ்.எம். இ துறையினருக்கு ஏற்படும் மின்சார செலவுகளை குறைக்கும் விதமாக கடந்த ஆண்டு எம்எஸ்எம்இ துறை சார்பாக மின்சாரத் துறைக்கு 330 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு இதுவரை 386 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.