தமிழக முழுவதும் ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்தப் பள்ளி திறப்புக்கு முன்பே, ஆண்டு தோறும் பள்ளிகளில் குழந்தைகளை ஏற்றிச் செல்லக்கூடிய வாகனங்கள் தரமாக உள்ளதா? ஆவணங்கள் முறையாக உள்ளதா? வாகனங்கள் பாதுகாப்பாக உள்ளதா? என்பது குறித்து வருவாய் துறை அதிகாரிகள், போக்குவரத்து துறை அதிகாரிகள், பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்வது வழக்கம்.

இந்நிலையில், இந்த ஆண்டு பள்ளிகள் திறக்கப்பட உள்ள சூழலில், இன்று பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லக்கூடிய வேன்கள், பேருந்துகளின் பாதுகாப்பு, தகுதி குறித்து ஆய்வு செய்ய போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு ஆய்வு முகாம் நடத்தப்பட்டது. இதற்காக உத்தமபாளையம் மற்றும் போடி தாலுகாக்களில் செயல்பட்டு வரக்கூடிய அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளி வாகனங்கள்
உத்தம பாளையம் தனியார் கல்லூரி மைதானத்திற்கு கொண்டு வரப்பட்டது.
உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் சையதுமுகமது முன்னிலையில், உத்தமபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் சுந்தர்ராஜன் வாகனங்களை ஆய்வு செய்தார். முன்னதாக பள்ளி பேருந்துகளை ஓட்டும் வாகன ஓட்டிகள் மற்றும் நடத்துனர்களுக்கு குழந்தைகளை ஏற்றி செல்லும் போது எவ்வாறு பாதுகாப்பான முறையில் அழைத்துச் செல்ல வேண்டும் என்பது குறித்து உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் சையது முகமது சிறப்புரை நிகழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து சாலையில் போக்குவரத்தில் எவ்வாறு வாகன ஓட்டிகள் செயல்பட வேண்டும் எவ்வாறு வாகனங்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் வாகனங்களில் ஆவணங்கள் முறையாக வைத்திருக்க வேண்டும் என்பது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் சுந்தர்ராஜன் பேசினார். தொடர்ந்து அவசர காலங்களில் விபத்து ஏற்பட்டால் எவ்வாறு முதலுதவி அளிக்க வேண்டும்,
வாகனங்களில் எந்த மாதிரியான முதலுதவி பொருட்கள் வைத்திருக்க வேண்டும் என்பது குறித்து 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் விரிவாக எடுத்துக்கூறினர். மேலும் சாலையில் வாகனங்கள் செல்லும் போது அல்லது வாகனங்களில் கோளாறு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு தீயை அணைப்பது என்பது குறித்து தீயணைப்பு துறை அதிகாரிகள் செய்து காண்பித்தனர்.

இன்று நடைபெற்ற இந்த ஆய்வின் போது உத்தமபாளையம் மற்றும் போடி தாலுகாவைச் சார்ந்த சுமார் 150-க்கும் மேற்பட்ட பள்ளி வேன் மற்றும் பேருந்துகள் ஆய்வு செய்யப்பட்டனர். நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், தீயணைப்பு துறை அதிகாரிகள், மருத்துவ துறை சார்ந்தவர்கள் மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் பள்ளி நிர்வாகத்தினர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.