• Thu. May 2nd, 2024

கந்துவட்டியை ஒழிக்க வலியுறுத்தி.., காங்கிரஸ் நிர்வாகி அக்னிசட்டி ஏந்தி போராட்டம்..!

Byதரணி

Jul 10, 2023

கந்துவட்டியை ஒழிக்க வலியுறுத்தி காங்கிரஸ் நிர்வாகி அய்யலுசாமி கோவிலபட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் அக்கினி சட்டி ஏந்தி காவி உடை அணிந்து போராட்டத்தால் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் வழக்கறிஞர் அய்யலுசாமி என்பவர், கந்துவட்டி தடுப்பு சட்டத்தில் சட்டதிருத்தம் செய்ய வலியுறுத்தியும், கந்துவட்டி மாபியாக்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க வழியுத்தியும் இன்று காவி உடையுடன் கையில் அக்னி சட்டி ஏந்தி வந்து நூதன முறையில் போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
பின்னர் கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா அவர்களிடம் அளித்துள்ள மனுவில்..,
தமிழகத்தில் கந்துவட்டி, வாரவட்டி, தினவட்டி என ஒரு லட்சம் ரூபாய்க்கு நாற்பது ஆயிரம் ரூபாய் வரை மாதவட்டி வசூல் செய்கிறார்கள், கந்துவட்டி தொழில் கொடி கட்டி பறக்கிறது. தமிழக அரசு கந்துவட்டி தொழிலை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு கந்துவட்டி தடுப்பு சட்டதிருத்தம் மிக மிக அவசியம் என்று சட்டதிருத்தம் கேட்டு சுமார் நூறு முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை, உடனடியாக என் மனு மீது நடவடிக்கைஎடுக்க வேண்டும். மேலும் மனுவில் சில எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கந்துவட்டி தொழில் செய்கிறார்கள். சில அமைச்சர்கள் பணம் சினிமாதுறையில் வட்டிக்கு விடப்பட்டுள்ளது. ஆகவே கந்துவட்டி தொழிலை தமிழக அரசு தடை விதிக்க தயங்குகிறது என்று எனக்கு தோன்றுகிறது. ஆகவே வட்டி தொழில் செய்யும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மேயர்கள் நகராட்சிதலைவர்கள் மற்றும் அவர்களுடைய உறவினர்கள் வட்டி தொழில் செய்தால் உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் வட்டி தொழில் செய்வது ஏற்க முடியாது ஆகவே அப்படி பட்ட மக்கள் விரோதிகள் பதவி நீக்கம் செய்ய வேண்டும். துப்பரவு பணியாளர்கள் கந்துவட்டியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் ஏடிஎம் கார்டுகளை யார் பயன்படுத்தி பணம் எடுக்கிறார்கள் என்று ஆய்வு செய்ய வேண்டும்.


சில தனியார் பைனான்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனங்கள் கந்துவட்டி வசூல் செய்கிறார்கள், நிதி நிறுவனங்கள் தொகை நிரப்பப்படாத கையெழுத்து மட்டுமே பெறப்பட்ட வெற்று காசோலைகள் பல பெறுகின்றனர். ஆகவே நிதி நிறுவனங்கள் மீது புகார் வந்தவுடன் கந்துவட்டி தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். வெற்று கசோலைகள் வாங்கி வைத்து கொண்டு நிதி நிறுவனங்கள் அல்லது பைனான்ஸ் கம்பெனிகள் வட்டிக்கு வட்டி போடுகிறார்கள் ஆகவே அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கந்துவட்டி ஆபரேஷனை வேகப்படுத்த வேண்டும், கந்துவட்டி தொழிலை முற்றிலும் ஒழிக்க கந்துவட்டி தடுப்பு சட்டத்தில் சட்டதிருத்தம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.


மேலும் வழக்கறிஞர் அய்யலுசாமி கூறியதாவது கந்துவட்டி தடுப்பு சட்டத்தில் சட்டதிருத்தம் செய்ய வலியுறுத்தி நூறு மனு முதல்வர் தலைமை செயலாளர் சடத்துறை அமைச்சர் வரை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. ஆகவே இன்று கோவிலபட்டி கோட்டாட்சியர் அவர்களை மதுரை மீனாட்சியாக நினைத்து கையில் அக்கினி சட்டி ஏந்தி வந்து மனு அளித்தேன். என் மனு மீது உரிய நடவடிக்கை எடுத்து கந்துவட்டியை ஒழிக்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழக முதல்வர் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் வருகை தரும் பொழுது காந்திய வழியில் முதல்வர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் நிர்வாகிகளையும் கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை திரட்டி கருப்பு கொடியுடன் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கின்றேன் இவ்வாறு தெரிவித்தார். காங்கிரஸ் நிர்வாகி போராட்டத்தால் கோவிலபட்டி கோட்டாட்சியர் அலுவலகம் போலீஸ் பாதுகாப்பு போடடப்பட்டு இருந்தது. சிறிது பரபரப்புடன் காணப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *