

தூத்துக்குடி மீனவர்களால் சிறை பிடிக்கப்பட்ட குமரி மீனவர்கள், விஜய்வசந்த் எம். பி முயற்சியில் இன்று விடுவிப்பு.
கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் தூத்துக்குடிக்கு அருகாமையில் ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். இதனால் தூத்துக்குடியைச் சேர்ந்த மீனவர்கள் கன்னியாகுமரி மீனவர்களை சிறை பிடித்து சென்றனர். கட்சிப் பணிக்காக டெல்லியில் முகாமிட்டிருந்த கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இந்த தகவல் அறிந்ததும் உடனடியாக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்னன் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு உடனடியாக கன்னியாகுமரி மீனவர்களை தூத்துக்குடி மீனவர்கள் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
ஆனால் தூத்துக்குடி மீனவர்கள் அவர்களது உள்ளூர் பிரச்சனைகளுக்காக இவர்களை சிறை பிடித்து வைத்து விடுவிக்க மறுப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்தின் தீவிர முயற்சியால் தொடர்ந்து மீன்வளத்துறை அமைச்சர், சமூக நலத்துறை அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் மூலமாக மீனவர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த வைத்து இன்றைக்கு சிறைபிடிக்கப்பட்ட 86 மீனவர்களையும் அவர்களது படகுகளையும் தூத்துக்குடி மீனவர்கள் விடுவித்தனர்.
இன்றைக்கு விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வருகை தந்த கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், நேரடியாக தூத்துக்குடி துறைமுகம் சென்று தூத்துக்குடி மீனவர்களால் சிறை பிடிக்கப்பட்டு வைத்திருந்த கன்னியாகுமரி சேர்ந்த எண்பத்தி ஆறு மீனவர்களையும் நேரடியாக சந்தித்து நீங்கள் அனைவரும் தற்போது பேச்சுவார்த்தை மூலம் விடுவிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை தெரிவித்தார், ஆகவே நீங்கள் அனைவரும் உங்களது படகுகள் மூலம் மீண்டும் தங்களது பகுதிகளுக்கு செல்லலாம் இனி வரும் காலங்களில் இது போன்று நடைபெறாமல் இருக்க அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுப்பேன் என்ற உறுதியையும் அளித்தார்.


