• Thu. May 2nd, 2024

நாளை விண்ணில் ஏவப்படுகிறது இன்சாட் – 3 டிஎஸ் செயற்கைக்கோள்

Byவிஷா

Feb 16, 2024

நாளை மாலை பழவேற்காடு பகுதியில், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்சாட் – 3 டிஎஸ் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ளதால், அப்பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இஸ்ரோ வடிவமைத்துள்ள அதிநவீன இன்சாட்-3டிஎஸ் எனும் செயற்கைக்கோள், வானிலை மாறுபாடுகளைக் கண்காணித்து தகவல் வழங்குவதற்காக ஜிஎஸ்எல்வி எஃப்-14 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து நாளை மாலை 5.30 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ராக்கெட் ஏவுதலுக்கான 27.30 மணி நேர கவுன்ட்டவுன் இன்று மதியம் 2.05 மணிக்கு தொடங்க உள்ளது. அதையொட்டி பழவேற்காடு பகுதி மீனவர்கள் நாளை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
வானிலை செயற்கைகோளை சுமந்து செல்லும் இந்த ஜிஎஸ்எல்வி எப்-14 ராக்கெட் 420 டன் எடை கொண்டது. 51.7 மீட்டர் உயரத்துடன் 3 நிலைகளைக் கொண்ட இந்த ராக்கெட்டின் முதல் நிலையில் 139-டன் உந்துசக்தியைக் கொண்ட திட உந்துசக்தி மோட்டார் பொருத்தப்பட்டு உள்ளது. அத்துடன் 4 உந்துசக்தி நிலைகள் ஒவ்வொன்றும் 40 டன் திரவ உந்துசக்தியை கொண்டுள்ளன. ராக்கெட்டின் 2-வது நிலையில் 40 டன் உந்து சக்தியுடன் கூடிய எந்திரம், 3-வது நிலையில் 15 டன் திரவ ஆக்சிஜன் மற்றும் திரவ ஹைட்ரஜன் நிரப்பப்பட்ட கிரையோஜெனிக் நிலையாகும். எரிபொருள் நிரப்பப்பட்ட நிலையில், ராக்கெட் மற்றும் செயற்கைகோளின் செயல்பாடுகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
ராக்கெட் விண்ணில் பாய்வதை நேரில் பார்வையிட மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி கோரி https://lvg.shar.gov.in என்ற இணையதள முகவரியில் ஏராளமானவர்கள் முன் பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு ராக்கெட் ஏவப்படுவதை நேரில் காண அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *